இந்தியா

வங்கிக் கடன்களை 100% திருப்பிச் செலுத்தி விடுகிறேன்: மீண்டும் மல்லையா உறுதி

பிடிஐ

இந்திய வங்கிகளுக்கு ரூ.9000 கோடி கடன் பாக்கி விவகாரத்தில் லண்டனில் நாடுகடத்தல் உத்தரவுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வரும் விஜய் மல்லையா, 100%கடன்களை திருப்பிச் செலுத்தி விடுகிறேன் என்று மீண்டும் ஒரு முறை உறுதியளித்துள்ளார்.

தன சமூகவலைத்தளப் பக்கத்தில் ஜெட் ஏர்வேஸ் நிலைமைக்காக வருந்திய விஜய் மல்லையா இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கு கடன்களை 100% திருப்பிச் செலுத்தி விடுவதாக மீண்டும் ஒரு முறை உத்தரவாதம் அளித்துள்ளார்.

நிதிமோசடி வழக்குகளை எதிர்கொண்டு வரும் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர அனுமதி கிடைத்ததை எதிர்த்து லண்டனில் சட்டப்போராட்டம் நடத்தி வரும் விஜய் மல்லையா  “பல இந்திய விமான சேவை நிறுவனங்கள், கிங்ஃபிஷர் உட்பட வீழ்ச்சியடைந்துள்ளன, இது வருந்தத் தக்கது, தற்போது முன்பு சிந்திக்கப்பட முடியாததாக இருந்த ஜெட் ஏர்வேஸ் வீழ்ச்சியும் நடந்துள்ளது. இவையெல்லாம் உண்மையான வர்த்தகத் தோல்விகளே, ஆனால் என் மீது சிபிஐ/அமலாக்கத்துறை குற்ற வழக்கு தொடர்ந்துள்ளது. நான் இத்தனைக்கும் கடன்களை 100% திரும்பச் செலுத்துவதாகவும் உறுதியளித்திருந்தேன். ஏன் என்னை மட்டும் ஏன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஜெட் ஏர்வேஸின் வருந்தத்தக்க வீழ்ச்சி குறித்த விவாதங்களை டிவியில் பார்த்தேன். இதில் சம்பளம் பெறாத ஊழியர்கள் விவகாரமும் உள்ளது. அதாவது வேலையின்மை, வேதனை, கஷ்டம், வங்கிகளுக்கு இருக்கும் செக்யூரிட்டி, மீட்டெழுச்சிக்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்த விவாதங்களை பார்க்கிறேன். இங்கு நான் 100% வங்கிக்கடன்களை திருப்பிச் செலுத்தி விடுகிறேன் என்று கூறுகிறேன், ஆனால் வங்கிகள் எடுத்துக் கொள்ளவில்லை ஏன்? என்று அவர் கூறியுள்ளார்.

இவரை இந்தியாவுக்கு நாடுகடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலர் சாஜித் ஜாவித் பிப்ரவரியில் கையெழுத்திட்டார். இப்போது பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் மல்லையா.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதியின் முன் இவர் தன் தரப்பு வாதங்களை முன் வைக்க ஜூலை 2ம் தேதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இவர் மீது லண்டனில் பல்வேறு கோர்ட்களில் மேலும் சில வழக்குகள் தொடரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT