இந்தியா

வயிற்று வலியால் போராடிய 10-ம் வகுப்பு மாணவியைக் காப்பாற்றி தேர்வு எழுத வைத்த ராணுவ மருத்துவர்கள்

பிடிஐ

வயிற்று வலியால் போராடிக் கொண்டிருந்த மாணவிக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து, அவரை பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வையும் எழுத வைத்த சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது. இந்த உதவியை பதான்கோடு ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் செய்தனர்.

பரபரப்பான இச்சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளாவது:

''பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி இறுதித் தேர்வுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டிருந்த நிலையில் ஒரு தேர்வு மட்டுமே மீதமிருந்த நிலையில் அனுஷிகா என்ற மாணவி வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவரது குடல்வாலில் ஓட்டை ஏற்பட்டு வலியால் துடித்தபடி மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 26-ம் தேதி அவர் பதான்கோடு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரின் அவசர நிலை அறிந்த மருத்துவர்கள் மாணவியைப் பரிசோதித்தனர்.அவரின் வயிற்றில் குடல் அழற்சியால் துளையிருந்ததைக் கண்டுபிடித்தனர். உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

இது ஒரு சவாலான பணி. ஏனெனில் வயிற்றில் ஏற்பட்டுள்ள குடல்வால் அழற்சி பகுதியைச் சுற்றி கடுமையான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு கட்டிகள் உருவாகியிருந்தன.

மிகவும் அவசர நிலையில்தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில மணிநேரம் தாமதித்திருந்தால்கூட பல உறுப்புகள் செயலிழந்திருக்கக்கூடும். இதனால் அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும் என்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அர்ப்பணிப்புமிக்க அறுவை சிகிச்சையினால் மாணவியின் எதிர்காலம் மீட்டெடுக்கப்பட்டது. அத்துடன் யாருடைய உதவியுமின்றி அவர் செவ்வாய்க்கிழமை அன்று தனது இறுதித் தேர்வையும் எழுதினார்''.

இவ்வாறு ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT