இந்தியா

எனக்கு வாக்கு அளிக்காவிட்டால் பாவம் சேரும்: வாக்காளர்களை மிரட்டிய சாக்‌ஷி மகாராஜ்

ஏஎன்ஐ

மக்களவைத் தேர்தலில் எனக்கு வாக்களிக்காதவர்களுக்கு பாவமே சேரும் என பாஜக வேட்பாளர் சாக்‌ஷி மகாராஜ் கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

இவருக்கு சர்ச்சைப் பேச்சுகள் ஒன்றும் புதிதல்ல. பலமுறை பலவிதமான சர்ச்சைகளை அவர் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

அண்மையில்கூட 2019 மக்களவைத் தேர்தலில் 'மோடி சுனாமி' வெற்றி பெற்ற பின்னர் நாட்டில் தேர்தல் நடத்தவே தேவை இருக்காது எனக் கூறினார். அந்த வரிசையில் அவரின் இந்த சர்ச்சைப் பேச்சு கடைசியாக இணைந்து கொண்டுள்ளது.

சாக்‌ஷி மகாராஜ் பேசியதாவது:

"நான் ஒரு சன்னியாசி. சாஸ்திரங்கள் சன்னியாசி யாசிப்பதைக் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஒருவேளை அப்படி அவர் கேட்டும் கொடுக்காவிட்டால் அந்த சன்னியாசி தான் யாசகம் கேட்டு மறுத்த நபரின் நற்செயல் பலன்களை எடுத்துக் கொண்டு பாவத்தை திருப்பித் தருவார் எனக் கூறுகிறது.

நான் உங்களிடம் உங்களின் சொத்துகளைக் கேட்கவில்லை. 125 கோடி இந்தியர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் உங்களின் வாக்குகளை எனக்களிக்கும்படியே கேட்கிறேன்".

இவ்வாறு மக்களவைத் தேர்தலுக்காக உத்தரப் பிரதேச மாநிலம் உனாவோவில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் அனைத்து கட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தின் வாக்குகள் பிரதமரைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அங்கு ஆளும் பாஜக அரசு தங்கள் கட்சிக்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.

மேனகா காந்தி சர்ச்சை அடங்குவதற்குள்..

முன்னதாக, சுல்தான்பூரில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் மேனகா காந்தி,முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் கோரிக்கைகளை தான் புறக்கணிக்க வேண்டியிருக்கும் என்ற தொனியில் பேசியிருந்தது சர்ச்சையானது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு பாஜக பிரமுகர் வாக்காளர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT