இந்தியா

பிரதமர் மோடியின் வேட்புமனுவை ரத்து செய்யவேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம்

பிடிஐ

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சு குதிரைப் பேரத்துக்கானது, ஆத்தரத்தை வரவழைக்கும் இந்தபேச்சு ஜனநாயகத்துக்கு விரோதமானது அவரின் வேட்புமனுவை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள ஸ்ரீராம்பூரில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், " மக்களவைத் தேர்தல் முடியட்டும், மே.வங்கத்தில் தாமரை மலரும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். மம்தா குறைவான எம்.பி.க்களுடன் பிரதமர் கனவு காண்கிறார். மம்தாவுக்கு டெல்லி மிக தொலைவில் இருக்கிறது. தனது உறவுகளுக்கு பதவி கொடுத்து அலங்கரிக்கார் மம்தா" எனப் பேசி இருந்தார்

பிரதமர் மோடியின் இந்த பேச்சுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமர் மோடி குதிரைப் பேரத்தை தூண்டும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 40 பேர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார் என்பதை உங்கள் கவனத்தில் கொண்டு வருகிறோம்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு எங்களுக்கு அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் பேச்சுக்கு கடுமையான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். மோடியின் பேச்சு சட்டவிரோதமானது, சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு விரோதமானது

பிரதமர் மோடியுடன் 40எம்எல்ஏக்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று  அவர் பேசியதற்கு ஆதாரங்கள் என்ன என்று தேர்தல் ஆணையம் அவரிடம் கேட்கவேண்டும். அந்த ஆதாரங்களை அவர் தரமறுத்தால், தேர்தல் விதிமுறைகளை மீறி ஜனநாயகத்துக்கு விரோதமாகவும், ஆத்திரத்தை தூண்டும்வகையிலும் பேசிய அவர் மீது நடவடிக்கை எடுத்து, வேட்புமனுவை ரத்து செய்ய வேண்டும். பிரதமர் மோடியின் பேச்சு மாநிலத்தில் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் வகையில் இருக்கிறது.  இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT