குஜராத் விவசாயிகள் மீது வழக்கு தொடுத்ததால் பெப்சி தயாரிப்புகளுக்கு எதிராக புறக்கணிப்பு பிரச்சாரம் தொடங்க இருப்பதால் பிரச்சினையை வளரவிடாமல் உடனடியாக தீர்க்குமாறு அந்நிறுவனத்தின் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
லேஸ் சிப்ஸ் உருளைக்கிழங்கு விதைகளுக்கு அறிவுசார் சொத்துரிமை தங்கள் நிறுவனத்துக்கு இருப்பதால் அதைப் பயிர்செய்து விளைவிப்பதன் மூலம் நிறுவன உரிமைகளை விவசாயிகள் மீறிவிட்டதாகவும் இதற்கு நஷ்ட ஈடாக ரூ.4.2 கோடி அளிக்க வேண்டுமென்றும் பன்னாட்டு அமெரிக்க நிறுவனமான பெப்சி நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் பெப்சி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையேயான சட்டப் போராட்டத்தில் விவசாயிகள் பக்கம் நிற்கப்போவதாக குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் பாஜக, காங்கிரஸ் உட்பட பல கட்சிகளும் குஜராத் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. இதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண தயாராக இருப்பதாக பெப்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனிடையே குஜராத் விவசாயிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை கண்டித்து குஜராத் உட்பட சில தன்னார்வ அமைப்புகள் பெப்சி நிறுவன தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு கோரி பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. குறிப்பாக உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பெப்சி நிறுவன தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க கோரி சமூகவலைதளங்கள் வாயிலாகவும், துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் பிரச்சாரங்கள் நடக்கின்றன.
பெப்ஸி நிறுவனத்தை கண்டித்து சில விவசாய அமைப்புகள் போராட்டங்களும் நடத்தியுள்ளன. இதனால் பெப்ஸி நிறுவன தயாரிப்புகளுக்கு எதிராக சூழல் உருவாகியுள்ளதால் உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு பெப்ஸி நிறுவனத்தின் தலைமையகம், தனது இந்திய பிரிவை கேட்டுக்கொண்டுள்ளது.
துபாயில் உள்ள பெப்சி நிறுவனத்தின் ஆசிய - பசிபிக் பிரிவின் நிர்வாகிகள், இந்திய பிரிவை தொடர்பு கொண்டு மிகவேகமாக பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும், இதற்காக மூத்த நிர்வாகிகள் இருவருக்கு பணியை ஒதுக்கி பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேசமயம் இந்தியாவின் சூழலைக் கருத்தில் கொண்டு சுதந்திரமாக முடிவெடுக்க பெப்சி நிறுவனத்தின் தலைமையகம் பணித்துள்ளதாகவும், அதனடிப்படையில் தாங்கள் செயலாற்றி வருவதாகவும் பெப்சிகோ இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.