போலி என்கவுன்ட்டர்களை தடுக்க உச்ச நீதிமன்றம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் போலி என்கவுன்ட்டர்கள் அதிகரித்து விட்டதாக கூறி சூரத் சிங் என்பவர் தொடர்ந்த பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:
தீவிரவாதிகள் அல்லது குற்றவாளிகளுடன் போலீஸார் சண்டையிடும்போது என்கவுன்ட்டர் மூலம் மரணம் ஏற்பட்டால் உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 176-ன் கீழ் மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாநில சிஐடி போலீஸார் அல்லது வேறு காவல் நிலைய போலீஸார் மூலம் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
குற்றவாளிகளை அல்லது தீவிரவாதிகளை பிடிக்கச் செல்லும் முன் அவர்களைப் பற்றி கிடைத்துள்ள ரகசிய தகவல்கள், பிடிப்பதற்கு செல்பவர்களின் ஒவ்வொரு நகர்வும் எழுத்துமூலம் பதிவு செய்யப்பட வேண்டும். என்கவுன்ட்டர் நடந்துவிட்டால் அதில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை உடனே ஒப்படைக்க வேண்டும்.
என்கவுன்ட்டர் குறித்த தகவல்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்த அறிக்கை ஆகியவை அனைத்தும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு, விசாரணை நடைபெறும் காலத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
என்கவுன்ட்டர் சம்பவத்தில் தொடர்புடைய போலீஸாருக்கு விசாரணை முடிந்து, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்படும் வரை அவர்களுக்கு வீரதீர விருதுகள், நற்சான்றிதழ்கள், பதவி உயர்வுகள் வழங்கப்படக் கூடாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.