தடுப்புக் காவலில் இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு என்று ஹரியாணா, மகாராஷ்டிர மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அக்டோபர் 15-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இம்மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், தடுப்புக் காவலில் இருப்பவர்களுக்கு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 62 (5)-ன் கீழ் தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“தடுப்புக் காவலில் இருப்பவர்களின் பெயர், முகவரி, வாக்காளர் பட்டியல் எண்கள் ஆகியவற்றை ஒவ்வொரு தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பவேண்டும். இதன் மூலம் அவர்கள் தபால் மூலம் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த உத்தரவு மீறப்படுவதாக புகாருக்கு இடமளிக்காத வகையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும்” என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ