எந்த விதிமுறைகளையும் மீறாமல் இருந்த என் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகாக நான் இருளில் போராடிக்கொண்டிருக்கிறேன் என்று பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனையிட்ட ஐஏஎஸ் அதிகாரி வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 1996-ம் ஆண்டு கர்நாடக ஐஏஎஸ் பேட்ஜைச் சேர்ந்தவர் முகமது மோசின். தேர்தல் அதிகாரியாக சம்பல்பூரில் நியமிக்கப்பட்டிருந்தார்
பிரதமர் மோடி கடந்த 16-ம் தேதி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றிருந்த நிலையில் மோடி பயணித்த ஹெலிகாப்டர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏதேனும் மீறியிருக்கிறதா என்பதை அறிய அதிகாரி முகமது மோசின் சோதனையிட்டார்.
பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவினரை மீறி இந்தச் சோதனையை முகமது மோசின் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர், போலீஸ் டிஐஜி ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் முகமது மோசின் குறித்து புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து தேர்தல் பார்வையாளர் முகமது மோசினை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதில், "தேர்தல் பார்வையாளர் முகமது மோசின் தேர்தல் ஆணையம் பிறப்பித்த விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கவில்லை. பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரைச் சோதனையிட்டது தேர்தல் விதிமுறைக்கு முரணானது. சிறப்பு பாதுகாப்புப் படைபிரிவினர் இருக்கும் இடம் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை மீறி முகமது மோசின் செயல்பட்டுள்ளதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார்.
ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசினின் கோரிக்கையை ஆய்வு செய்த தீர்ப்பாய நீதிபதி கே.பி. சுரேஷ் , தேர்தல் ஆணையம் விதித்திருந்த சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தார்.
சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற்ற தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரி முகமது மோசினை மீண்டும் கர்நாடக மாநிலத்துக்கு அனுப்ப உத்தரவிட்டது. இருந்தபோதிலும், கடமையில் கவனக்குறைவாக இருந்தமைக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் " தேர்தல் ஆணையம் எனக்கு வழங்கிய விதிமுறைகளின்படிதான், வழிகாட்டி நெறிமுறைகள்படிதான் என் கடமையைச் செய்தேன். நான் எந்தவிதமான விதிமுறைகளையும் மீறவில்லை.
எந்தவிதமான தவறையும் இந்த விஷயத்தில் செய்யவில்லை. அதனால்தான் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தின் நகலை நான் கேட்டுப் போராடுகிறேன். ஆனால், இதுவரை எனக்கு அந்த நகலை தேர்தல் ஆணையம் வழங்க மறுக்கிறது. நான் செய்யாத தவறுக்காக, கடமையைச் செய்தமைக்காகவும் இருளில் போராடிக்கொண்டிருக்கிறேன்.
நான் ஏப்ரல் 16-ம் தேதி பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை நேரடியாக சோதனையிட உத்தரவிடவில்லை. சோதனையிட்ட அந்த இடத்திலும் நான் இல்லை. என்னை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது சட்டவிரோதம், இயல்புக்கு மாறானது.மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் நகலை என்னிடம் வழங்க மறுக்கிறார்கள். அந்த நகல் எனக்குகிடைத்தால், நான் என்ன தவறு செய்தேன் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும், நானும் தெரிந்து கொள்வேன் " எனத் தெரிவித்தார்.