டெல்லியில் ஆம் ஆத்மியுடனான கூட்டணி நிச்சயமாகாத நிலையில் மூத்த தலைவர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் காங்கிரஸ் தனித்து நிற்பதென முடிவாகியுள்ளது.
டெல்லி காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித், காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளரும் டெல்லி பிரிவு பொறுப்பாளருமான பி.சி.சாக்கோ மற்றும் கட்சியின் சில மூத்த தலைவர்கள் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் கலந்துரையாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில தினங்களாக நடந்து வந்த இந்தக் கலந்துரையாடலில் இன்று ராகுல் காந்தி கலந்துகொண்டாடர். கலந்துரையாடல் இன்று நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி டெல்லியில் தனித்து போட்டியிடப் போவதாகவும் ஆளும் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்தவிதக் கூட்டணியும் இல்லை என்றும் தீர்மானித்துள்ளது.
முன்னதாக சாக்கோ, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங்கை சந்தித்துப் பேசினார். இருவரும் இந்த விவகாரத்தில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
டெல்லியில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று சரத் பவார் போன்ற சில மூத்த தலைவர்களின் முயற்சிகள் மூலம் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு இடையே ஒரு புதிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் பேச்சுவார்த்தையில் இணைந்து செயல்படும்விதமான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.
மக்களவைத் தேர்தலுக்காக தேர்தலுக்கு முன்னதாக முன்னெடுக்கப்படும் இக்கூட்டணி முயற்சியினால் ஏற்படக்கூடிய விளைவு அடுத்து வரும் 2020 டெல்லி சட்டப்பேரவையிலும் பிரதிபலிக்கும் என்று காங்கிரஸ் கருதுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.