காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தேசத் துரோக சட்டம் நீக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததற்காக கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நரேந்திர ஷர்மா என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். இவ்வழக்கு ஏப்ரல் 16 அன்று விசாரணைக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து வழக்கறிஞர் தெரிவித்த விவரம்:
ராகுல் காந்தி எதை நிரூபிக்க முயற்சிக்கிறார். இந்த நாட்டில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தர முயற்சிக்கிறாரா? தேசத் துரோக சட்டம் அகற்றப்பட்டால், நாட்டின் நிலைமை மோசமடையக்கூடும். இப்பிரச்சினை குறித்து நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். இவ்வழக்கு வரும் 16 அன்று விசாரணைக்கு வருகிறது.'' என்றார்.
காங்கிரஸ் தனது, 'மக்களவைத் தேர்தல் 2019' தேர்தல் அறிக்கையில். நாட்டில் "வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் தேசத் துரோகச் சட்டத்தை அகற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளது
என்ன சொல்கிறது தேசத்துரோக சட்டம்?
இந்திய குற்றவியல் சட்டத்தின் 124ஏ பிரிவு கீழ் தேசத் துரோகம் என்றால் என்ன என்பதைக் குறித்து, கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது:
''வார்த்தைகளாலும், பேச்சுகளாலும், எழுத்துக்களாலும், அடையாளங்களாலும், அல்லது வெளிப்படையான பிரதிநிதித்துவத்தாலும், வெறுப்பு அல்லது இகழ்வுணர்வை ஏற்படுத்துதல் அல்லது முயற்சித்தல், சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக விரோதத்தை ஏற்படுத்துதல் அல்லது தூண்டுதல் போன்ற முயற்சிகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும். அல்லது ஆயுள்தண்டனையோடு மேலும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை நீட்டிக்கப்படலாம். அல்லது இவற்றில் எந்த நல்லதோ அல்லது எது சிறந்ததோ அதை சேர்த்துக்கொள்ளலாம்.''