பசுவின் கோமியத்தின் மூலம் கேன்சரில் இருந்து குணமடைந்தேன் என்றுகூறி அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய பாஜகவின் போபால் தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர், கேன்சருக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாகப் பேசிய ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை பொது மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜ்புத், ''தாக்கூர் ஆரம்பகட்ட கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு 3 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2008-ம் ஆண்டு மும்பையின் ஜேஜே மருத்துவமனையில் அவருக்கு முதன்முதலாக சிகிச்சை அளித்தேன். அப்போது அவரின் வலது மார்பகத்தில் கட்டி உருவாகி இருந்தது.
அப்போது கட்டியின் நிலை தெளிவில்லாமல் இருந்தது. 2012-ல் மீண்டும் கட்டி உருவானது. அதற்குப் பிறகு கட்டியோடு சேர்ந்து தாக்கூரின் வலது மார்பகத்தில் மூன்றில் ஒரு பங்கை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினோம்.
இரண்டாவது அறுவை சிகிச்சை போபாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்றது. கேன்சர் கட்டி மற்றும் திசுக்கள் பரிசோதனைகளுக்காக மும்பைக்கு அனுப்பப்பட்டன. அப்போது அவருக்கு ஸ்டேஜ் - 1 கேன்சர் முற்றிய நிலையில் இருந்தது.
2017-ல் தாக்கூருக்கு ஜாமீன் கிடைத்தவுடன் மீண்டும் ஓர் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது அவரின் இருபக்க மார்பகங்களும் அகற்றப்பட்டன'' என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் பிரக்யா தாக்கூருக்கு கீமோதெரபியும் ரேடியேஷனும் வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மருத்துவர் ராஜ்புத் மறுத்துவிட்டார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில்கூட வழக்கமான பரிசோதனைக்காக தாக்கூர் வந்ததாகவும் அப்போது அவரின் மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் சரியாக இருந்ததாகவும் கூறினார் ராஜ்புத்.