இந்தியா

ராகுல் காந்தி சென்ற விமானத்தில் திடீர் கோளாறு: மீண்டும் டெல்லியில் தரையிறக்கம்

பிடிஐ

பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் டெல்லிக்குத் திரும்பியது.

விமானத்தில் ஏற்பட்ட எந்திரக் கோளாறு தொடர்பாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.

பிஹார், ஒடிசா மற்றும் மஹாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரம் செய்ய  இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டு இருந்தார். இதற்காக ஹாக்கர் 850 எஸ்பி விமானத்தில் இன்று காலை டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு ராகுல் காந்தி புறப்பட்டார். ராகுலுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 பேர் உடன் சென்றனர்.

விமானம் நடுவழியில் சென்றபோது, எந்திரக் கோளாறு இருப்பதாகக் கூறி, விமானத்தை வேறு வழியில்லாமல் மீண்டும் டெல்லிக்கு விமானி திருப்பினார். விமானம் பாதுகாப்பாக காலை 10.20 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்தச் சம்பவம் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த செய்தியில், "பாட்னாவுக்குச் சென்ற எங்களுடைய விமானத்தில் எந்திரக் கோளாறு. இதனால், வேறு வழியின்றி டெல்லிக்குத் திரும்பிவிட்டோம்.

பிஹாரின் சமஸ்திபூர், ஒடிசாவின் பாலாசூர், மகாராஷ்டிராவின் சங்கம்னர் ஆகிய பகுதிகளுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்வது தாமதமாகும். தாமதத்துக்கும், அசவுகரியக் குறைவுக்கும் மன்னிக்கவும் " எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ராகுல் காந்தி விமானத்தில் திடீரென எந்திரக் கோளாறு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து, விசாரணை நடத்தப்படும் என்று விமானப் போக்குவரத்துதுறை ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் இரு விமானிகள், ராகுல் காந்தி உள்பட 8 பேர் இருந்தனர். ராகுல் காந்தி விமானம் கோளாறை எதிர்கொள்வது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ம் தேதி இதேபோன்று டெல்லியில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி செல்லும் போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டு விமானம் கீழ்நோக்கி பாய்ந்து, பின்னர் விமானி அதைச் சரிசெய்து ஓட்டினார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT