கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டுவரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பாஜக தலைவர்கள் கோவா விரைந்துள்ளனர்.
பனாஜியில் இன்று பிற்பகலுக்கு பின், மாநில பாஜக தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளதால், அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவந்தார்.இதைத் தொடர்ந்து கோவா திரும்பிய அவர் அரசுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், மனோகர் பாரிக்கருக்கு பதிலாக தங்களை ஆட்சி அமைக்க காங்கிரஸ் கோருகிறது. ஆனால், அதற்கு பாஜக தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், அரசுப் பணிகளில் மெல்ல ஈடுபட்ட வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்க, சூழலை பயன்படுத்திய காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் முதல்வர் இல்லாத சூழல் நிலவுகிறது, ஆதலால், மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஆளுநரிடம் நேற்று மனு அளித்தது. மனோகர் பாரிக்கரை முதல்வர் பதவியில் இருந்து மாற்றும் முடிவு ஏதும் எடுக்கப்படாது என்று பாஜக தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், அது குறித்து ஆலோசிக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. பாரிக்கரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு புதிய முடிவை எடுக்க, கோவா பாஜக நிர்வாகிகள் இன்று பிற்பகலில் பானாஜி நகரில் கூடி ஆலோசிக்கின்றனர்.
மேலும், பாஜக மேலிடத்தில் இருந்து இரு முக்கியத் தலைவர்களும் இன்று பிற்பகலுக்கு பின் கோவா விரைந்து, ஆலோசனைக் கூட்டத்திலும், எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் பங்கேற்கின்றனர். அதன்பின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
பாஜக முன்னாள் அமைச்சரும், முக்கியத் தலைவருமான தயனாந்த் மந்த்ரேக்கர் கூறுகையில், " மனோகர் பாரிக்கர் உடல்நிலை சீராக இருந்தால், நலமாக இருந்தால், தலைவரை மாற்றுவது குறித்து பேசப்போவதில்லை. ஆனால், இப்போது பேச வேண்டியது இருக்கிறது. இப்போது அவரின் உடல்நிலை மோசமடைந்துவிட்டது. நாளுக்கு நாள் பாரிக்கர் உடல்நிலை நலிவடைந்துவருவதால், முக்கிய முடிவு எடுக்க பாஜக கூட்டம் கூடுகிறது. அரசு இயங்க ஒரு முதல்வர் தேவையென்றால், கேபினெட் தலைவர் ஒருவரும் தேவை " எனத் தெரிவித்தார்.
துணை சபாநாயகரும், பாஜக எம்எல்ஏ.வுமான மைக்கேல் லோபோ கூறுகையில், " கடந்த வெள்ளிக்கிழமை இரவில் இருந்து மனோகர் பாரிக்கர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது. டாக்டர்கள் அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தபோதிலும் ஏதும் கூற மறுக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.