பொருளாதார குற்றத்தில் சிக்கி தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா எப்போது நாடு திரும்புவார், தனக்கு எதிராக இருக்கும் வழக்குகளை எப்போது சந்திக்கப்போகிறார் என்று மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அரசு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி ஓடினார். தலைமறைவு நிதி மோசடியாளராக, விஜய் மல்லையாவை கடந்த ஜனவரி 5-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் மல்லையா சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் இந்திரஜித் மெஹந்தி, சாரங்க் கோத்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று நடந்தது.
விஜய் மல்லையா சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் ஆஜராகினார். அவர் வாதிடுகையில், " வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதாக மல்லையா அறிவித்தும் புதிய சட்டப்படி, அவர் தலைமறைவு நிதி மோசடியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது சட்ட விரோதம். இதன் மூலம், அவருடைய அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு கடனளித்த வங்கிகளுக்கு பாதிப்பே ஏற்படும் என்று வாதிட்டார்
அப்போது நீதிபதிகள், மல்லையா இந்தியா திரும்பி, வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளத் தொடங்கியவுடன், அவர் மீதான மோசடியாளர் முத்திரை மறைந்து விடும். அவரின் சொத்துக்கள் கூட விடுவிக்கப்படும். ஆனால், இது எப்போது நடக்கப்போகிறது. அவர் எப்போது இந்தியா வருவார்? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த மல்லையா வழக்கறிஞர் அமித் தேசாய், " விஜய் மல்லையா தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடியதால்தான், பாதுகாப்பு கருதி, அவர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது" என்றார். அப்போது, நீதிபதிகள் கூறுகையில், " நீதிமன்றம் தடைவிதித்தாலும், இந்தியாவுக்குச் சென்று வழக்குகளை எதிர்கொள்ளப்போகிறேன் எனக் கூறி எப்போது வேண்டுமானாலும் மல்லையா நாடு திரும்பமுடியும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை, வரும் 8-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.