காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இந்திய நிலைகள் மீதும் கமால்கோட் என்ற கிராமம் அமைந்துள்ள பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று காலை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உட்பட அப்பாவி பொதுமக்கள் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் பாரமுல்லா மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் பகுதிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பாகிஸ்தான் தரப்பில் சேதம் எவ்வளவு என்பது குறித்து உடனடியாக தகவல் இல்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக நமது விமானப்படையினர் பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து குண்டு வீசி தீவிரவாத முகாம்களை அழித்தனர். எனினும், இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.