இந்தியா

புதிய சாலைப்பாதுகாப்பு மசோதா: கடும் அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மசோதா 2014, என்ற புதிய மசோதா பற்றி மக்கள் கருத்தைக் கேட்டுப் பரிசீலிக்க இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.

மேலும் குழந்தைகள் சாலை விபத்தில் பலியானாலோ அல்லது ஓட்டுனரின் அலட்சியத்தினால் பலியானாலோ காரணமான நபர்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் முதல் 7 ஆண்டு சிறைத் தண்டனை வரை கொடுக்க இந்த மசோதாவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களை மது அருந்திவிட்டு ஓட்டும் ஓட்டுனர்களுக்கு முதல் முறைக் குற்றம் இழைத்தால் 3 ஆண்டுகள் சிறையும், ரூ.50,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

குடித்து விட்டு வாகனம் ஓட்டும் இளைஞர்களின் வாகன உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படவும் ரூ.25,000 அபராதம் விதிக்கவும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சிகப்பு சிக்னலை மீறி வாகனம் ஒட்டிச் செல்பவர்கள் 3ஆம் முறையாக மீறல் செய்யும் போது ரூ.15,000 அபராதம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து மேலும் கட்டாய பயிற்சிக்கும் இவர்கள் அனுப்பப்படுவர்.

நாட்டில் ஆண்டொன்றிற்கு 1.4 லட்சம் பேர் சாலை விபத்துகளில் பலியாகின்றனர். உலகிலேயே சாலை விபத்து மரணங்களில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

"இந்த புதிய மசோதா விபத்தினால் பாதிக்கப்படுவோர்களுக்கு உடனடி ஆறுதல் அளிக்கும். மேலும் லட்சக்கணக்கானோர் உயிரைப் பாதுகாக்கவும் உதவும் என்று சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.

இந்த மசோதா நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT