அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதால் அவர்கள் கேட்டபடி, அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக குக்குர் சின்னத்தை ஒதுக்க வாய்ப்பில்லை என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. இதுதொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் 26-ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தினகரன், சசிகலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
தினகரன் தனது மனுவில், ''இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கி டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதுவரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். தேர்தலை சந்திப்பதற்கு ஏதுவாக எங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக இன்று (திங்கட்கிழமை) பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், தினகரனின் அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதால், அவர்களுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று பதிலளித்தது. இதைத் தொடர்ந்து இதுதொடர்பான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.