இந்தியா

ஜம்மு கையெறிகுண்டு தாக்குதல்: கணிசமான தொகை கொடுத்து 16 வயது சிறுவனை ஏவிய ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளின் சதி அம்பலம்

பிடிஐ

ஜம்மு நகரப் பேருந்து நிலையத்தில் கையெறிகுண்டு தாக்குதலில் இருவர் பலியாக காரணமான 16 வயது சிறுவன் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளால் ரூ.50 ஆயிரம் பணத்திற்காக நியமிக்கப்பட்டவன் என்பது தெரியவந்துள்ளது.

பேருந்து நிலையத்தில் கையெறிகுண்டை வீசி வெடிக்கச்செய்துவிட்டு தப்பியோடிய ஒரு சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர். இக்குண்டுவெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 31 பேர் காயமடைந்துள்ளனர்.

வரும் 12ந்தேதி வந்தால் அச்சிறுவனுக்கு 16 வயது தொடங்க உள்ளது. அவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதக் குழுக்கள் மீண்டும் சிறுவர்களை தீவிரவாதிகளாக்கி ஜம்மு காஷ்மீர் மக்களிடையே பயங்கரவாததத்தை தொடங்கியுள்ளதன் அடையாளமாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த விவரம்:

ஜம்மு பேருந்து நிலையத்தில் கையெறிகுண்டை வீசும்படி ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதக் குழு சொல்லியே தான் இந்நாச வேலையில் ஈடுபட்டதாக விசாரணையில் அச்சிறுவன் கூறியுள்ளார்.

அவரிடமிருந்த ஆதார் அட்டை, பள்ளிக்கூட ஆவணங்கள் உள்ளிட்ட அடையாளச் சான்றுகளில் அவனது பிறந்த தேதி 2003, மார்ச் 12ல் என்று பதிவாகியுள்ளது.

அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் சிறுவனுக்கு வயது சோதனை ஒன்று நடத்தப்படும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குல்காம் மாவட்டத்திற்கான ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் ஃபயாஸ், காஷ்மீரிகளுக்கு புதிய ஒதுக்கப்பட்ட பகுப்பில் வசிந்த முஸாமில் என்பவரைக்கொண்டு ஜம்முவில் பரபரப்பான பகுதியொன்றில் குண்டு வீசி தாக்குதல் நிகழ்த்தியுள்ளார்.

இம்முறை முஸாமில் தனக்கு தைரியமில்லை என்று கூறி கையெறிகுண்டுத் தாக்குதலுக்கு மறுத்துவிட்டார். பின்னரே இச்சிறுவன் கையெறி குண்டு வெடிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளார். தற்போது இச்சிறுவனுக்கு 'சோட்டு' எனும் குறியீட்டு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது போலீஸ் காவலில் உள்ள இச்சிறுவனின் படம் முஸாமில்லுக்கு காட்டப்பட்டது. அச்சிறுவன் தங்களிடமிருந்து கையெறிகுண்டை பெற்றதை முஸாமில் அடையாளங்காட்டினார்.

கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ஜம்மு பேருந்துநிலையத்தில் நிகழ்ந்த மூன்றாவது குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் இது. பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டு மூன்று வாரங்கள் ஆனநிலையில் இக்குண்டுவெடிப்பு சம்பவத்தை தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர்.

பிப்ரவரி 14-ம் தேதி, ஜெய்ஷ் அமைப்பு நடத்திய புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாலகோட் தாக்குதலைத் நடத்தியது. இதனால் இந்தியா - பாகிஸ்தான்  எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

தொடர்ந்து நடைபெற்றுவரும் இச்சம்பவங்கள் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானை யுத்தத்தின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

நேற்று காலை ஜம்முவில் 11.50 மணியளவில் நடந்த இத் தாக்குதலில் உயிரிழந்தவர் பெயர் முகம்மது ஷாரீக். காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த 11 பேர் உள்ளிட்ட 32 பேர் இதில் காயமடைந்தனர். இதில் ஜம்மு நகரைச் சேர்ந்தவர்கள் 10 பேர், காயம்பட்ட மீதியுள்ள 11 பேரும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். இக் குண்டுவெடிப்பில் காயம்பட்டு உயிரிழந்தவர்களில் மற்றொருவர் பெயர் முகம்மது ரியாஸ் என்று அடையாளங் காணப்பட்டுள்ளது.

தீவிரவாதக் குழுக்கள் சிறுவர்களை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பயன்படுத்துவதன்மூலம் சட்டத்தின் கடும் தண்டனையிலிருலுந்து அவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இச்சிறுவனை போலீஸார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

யார் இந்த சிறுவன்

பெயிண்டிங் தொழிலில் ஈடுபட்டுவரும் தந்தைக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் இச்சிறுவன் மூத்தவன் என்று கூறப்படுகிறது. இவன் 9ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

சட்டத்தின் படி, அவர் சிறார் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அவரது விசாரணைக்காக ஒரு பொருத்தமான நீதிமன்றத்தில் மாநில அரசு ஒரு மனுவை தாக்கல் செய்யும்

காஷ்மீரில் பயங்கரவாத குழுக்கள் 2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சிறுவர்களுக்கு கணிசமான தொகையை அளித்து அவர்களைப் பயன்படுத்தி பாதுகாப்புப் படைகளின்மீது கையெறி குண்டுகளை வீசின.

எவ்வாறாயினும், இங்கு அதிக அளவில் பயங்காரவாதத்தில் அதிகம் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் உள்ள பெற்றோர்களை அழைத்து நல்ல விளைவுகளை ஏற்படுத்தத்தக்க ஆலோசனைகளை காவல்துறை வழங்கிய பிறகு சிறுவர்களை பயன்படுத்துவது மிகவும் குறைந்திருந்தது. இந்நடைமுறை 2009ல் முடிவுக்கு வந்தது.

தற்போது இவ்வழக்கம் காஷ்மீர் மக்களிடையே துரதிஷ்டவசமாக மீண்டும் எழத்தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT