இந்தியா

டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது மக்களுக்கு நல்லது: ஷீலா திக்‌ஷித் கருத்தால் காங்கிரஸ் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா திக்‌ஷித், டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அது டெல்லி மக்களுக்கு நல்லது என்றும் கூறியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

"ஒரு ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி அமைப்பது மக்களுக்கு நல்லது. பாஜக அத்தகைய நிலையை எட்டியிருந்தால் அந்தக் கட்சி அரசை அமைக்கலாம். அது டெல்லிக்கும் நல்லதுதான்” என்று ஷீலா திக்‌ஷித் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கேரளா ஆளுநர் பதவியிலிருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த ஷீலா திக்‌ஷித், தான் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதாகக் கூறியதையடுத்து பாஜக-வுக்கு ஆதரவு அளித்துப் பேசியுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மேலும் கூறும்போது, “காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி அல்லது பிற கட்சி எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் இன்னொரு தேர்தல் நடத்தப்படுவதை விரும்பவில்லை என்றே நான் நினைக்கிறேன். எம்.எல்.ஏ-க்கள் தேர்வு செய்யப்பட்டு இன்னும் ஒரு ஆண்டு கூட முடியவில்லை. எனவே நான் புரிந்து கொண்ட அளவில், டெல்லியில் அரசு அமைய வேண்டும் என்ற விருப்பமே பரவலாக இருப்பதாக எனக்குத் தெரிகிறது.

எப்படி இந்த அரசு அமையப்போகிறது, சிறுபான்மை அரசுக்கு எந்த வித சவால்கள் இருக்கின்றன, அவர்கள் (பாஜக) இதனைக் கடந்து வருவார்களா என்பதெல்லாம் அந்தக் கட்சியைப் பொருத்ததே.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் மக்களுக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை. அவர்கள் குரல் எங்கும் கேட்கவில்லை. மக்கள் குரல் கேட்குமானல் அது சிறந்தது. பாஜக ஆட்சி அமைத்தால் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். எனவே முதலில் அரசு அமையட்டும் பிறகு முடிவு தன்னாலே வரும்.” என்றார்.

ஆனால் டெல்லி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் முகேஷ் சர்மா, கூறும்போது, "ஷீலா திக்‌ஷித்தின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது. அது அவரது தனிப்பட்ட கருத்து, காங்கிரஸ் கட்சிக்கும் அதற்கும் தொடர்பில்லை. எங்கள் நிலைப்பாடு ஆரம்பத்திலிருந்தே ஒன்றுதான், பாஜக-வை டெல்லியில் ஆட்சி அமைக்க விட மாட்டோம்” என்றார்.

SCROLL FOR NEXT