வீடு, கார், சேமிப்பு உட்பட தன்னுடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.70.69 லட்சம் மட்டுமே என ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு சமீபத்தில் தன்னுடைய மற்றும் தனது குடும்பத்தினரின் சொத்து விவரங் களை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
நான்காவது முறையாக எனது சொத்து விவரங்களை வெளியிடுகிறேன். இந்த விவரங் களை நன்னெறிக் கோட்பாடுகளின் செயற்குழுவுக்கு (Ethics Committee) தெரிவிப்பேன்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு என்னுடைய வங்கிக் கணக்கில் உள்ள சேமிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு இப்போது ரூ.45.90 லட்சமாக உள்ளது.
இதுதவிர, ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள எனது வீட்டின் மதிப்பு ரூ.23.02 லட்சம். என்னிடம் உள்ள அம்பாசிடர் காரின் மதிப்பு ரூ.1.52 லட்சம். ஆக மொத்தம் என்னுடைய சொத்து மதிப்பு ரூ.70.69 லட்சமாக உள்ளது. என்னுடைய மனைவி புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு ரூ.46.88 கோடியாகவும், மகன் லோகேஷின் சொத்து மதிப்பு ரூ.11.04 கோடியாகவும், மருமகள் பிரம்மணியின் சொத்து மதிப்பு ரூ. 5.32 கோடியாகவும் உள்ளது.
இதுதவிர என்னுடைய மனைவிக்கு ரூ.16.28 கோடியும், மகனுக்கு ரூ.4.47 கோடியும், மருமகளுக்கு ரு.1.37 கோடியும் கடன்கள் உள்ளன.
மேலும் எங்களது ஹெரிடேஜ் நிறுவனத்துக்கு ரூ.25.25 கோடி கடன் உள்ளது. இந்த நிறு வனத்தின் ஆண்டு விற்று வரவு ரூ.1,722 கோடியாகவும் லாபம் ரூ.45.31 கோடியாகவும் உள்ளது என்று சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.