‘ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசின் முக்கிய பொறுப்புகளை ஏற்கக் கூடாது’ என்று தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதாவின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. ஐந்து மாதங்கள் இப்பதவி வகித்துள்ள லோதா, ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் ஓய்வுபெற்ற பிறகு, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்காவது அரசின் முக்கிய பொறுப்புகளை ஏற்கக் கூடாது. சில நடுவர் மன்றங்கள், விசாரணைக் குழுக்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இத்தகைய சட்டங்களை திருத்த வேண்டும். இந்த விதிமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்.
நீதிபதி ஒருவர் ஓய்வுபெறும் போது, அவருக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கலாம். ஒன்று ஓய்வூதியம் பெறுதல், இரண்டாவது முழு சம்பளம் பெறுதல் ஆகிய இரண்டில் ஒன்றை அவர் தேர்வு செய்ய அனுமதிக்கலாம். ஓய்வூதியம் பெற அவர் முடிவு செய்தால், ஓய்வு காலத்தில் அவர் விரும்பியபடி செயல்படலாம். அரசு பொறுப்பு எதையும் ஏற்கக் கூடாது. முழு சம்பளம் பெற முடிவு செய்தால், அத்தகைய நீதிபதிகளின் பட்டியலை அரசு வைத்திருக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது இப்பட்டியலில் இருந்து ஒருவரை நியமிக்கலாம். அப்படி செய்தால், பதவிக்காக ஒரு நீதிபதி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு வர வாய்ப்பில்லை.
பதவியிலிருந்த கடந்த ஐந்து மாதங்களில் நான் பொறுப்பேற்கும் முன்பு இருந்ததைவிட, தற்போது மேம்பட்ட நிலையில் விட்டுச் செல்வதாக உணர்கிறேன். நீதிபதிகள் பொறுப்புடைமைச் சட்டம், தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம் போன்றவை அதிகாரிகள் நீதித் துறையை கட்டுப்பாட்டில் கொண்டு வர எடுக்கும் முயற்சியாகவே கருதுகிறேன். நீதித் துறையின் சுதந்திரத்தில் தலையிடாத வரை எந்த சட்டத்தையும் வரவேற்கலாம்.
மத்திய அரசு நிறைவேற்றி உள்ள தேசிய நீதிபதிகள் நியமனச் சட்டம், 15 மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும், குடியரசுத் தலைவரின் கையெழுத்தைப் பெற வேண்டும். பின்னர் அது செயல்பாட்டுக்கு வரும். லோக்பால், மத்திய ஊழல் கண்காணிப்பு குழு ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவரின் பணி அவசியமாக உள்ளது. இல்லாவிட்டால் அவற்றை திருத்த வேண்டும். இதுபற்றி பரிசீலித்து முடிவெடுப்பதாக அட்டர்னி ஜெனரல் உறுதி அளித்துள்ளார். இதுவிஷயத்தில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு ஆர்.எம்.லோதா கூறியுள்ளார்.