கோவாவில் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், தங்களுக்கு ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் எனவும் அம்மாநில ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மனோகர் பாரிக்கருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் கணைய நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதலில் மும்பையில் சிகிச்சை பெற்ற அவர், அமெரிக்காவுக்கு 2 முறை சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இதுபோல டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்.
அலுவலக பணிகளையும் தொடர்ந்து கவனித்து வந்தார். கடந்த மாதம் சட்டப்பேரவையில் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். பின்னர் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 5-ம் தேதி கோவா திரும்பினார். தொடர்ந்து அவ்வப்போது மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.
எனினும் அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற பாஜக தலைமை விரும்பவில்லை. இந்தநிலையில்,கோவாவில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என கோரி அம்மாநில ஆளுநருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதி உள்ளது
காங்கிரஸ் நிர்வாகி சந்திரகாந்த் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
‘‘கோவாவில் தற்போது உள்ள பாஜக பெரும்பான்மையை இழந்துவ விட்டது. குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த எடுக்கப்படும் முயற்சி சட்டவிரோதமானது. எனவே அந்த அரசை கலைத்து விட்டு தனிப்பெரும்பான்மையாக உள்ள எங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும’’ எனக் கூறப்பட்டுள்ளது.