கடந்த 27-ம் தேதி இந்திய பகுதிக் குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை, நமது விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப் பட்டார். எனினும், இந்திய அரசின் முயற்சியால் கடந்த 1-ம் தேதி அவர் பத்திரமாக நாடு திரும்பினார்.
மேலும் பாகிஸ்தானில் இருந்தபோது, அந்நாட்டு ராணுவ அதிகாரி கேட்ட கேள்விக்கு அபிநந்தன் துணிச்சலாக பதில் அளித்ததைப் பார்த்து இந்தியர்கள் பெருமை அடைந்தனர். இதனால், அவர் இந்தியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா நகரில் உள்ள விளையாட்டரங்கில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. காலியாக உள்ள 59 இடங்களுக்காக நடைபெற்ற இந்த முகாமில் 2,084 இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த முகாமில் பங்கேற்ற முபாசிர் அலி கூறும்போது, “ராணுவத்தில் சேர்வதற்காக இங்கு வந்துள்ளேன். நாட்டுக்காக சேவை செய்ய வேண்டியது என்னுடய பொறுப்பு. அபிநந்தனால் எனக்கு உத்வேகம் கிடைத்தது. அவர்தான் எனக்கு முன்மாதிரி” என்றார்.
ரோஹித் சிங் கூறும்போது, “அபிநந்தனால் ஈர்க்கப்பட்டு ராணுவத்தில் சேர முடிவு செய்துள்ளேன். இப்போது ஒவ்வொரு இளைஞரும் அவரைப் போல ஆக விரும்புகின்றனர்” என்றார்.