‘பிரதமர் விவசாயி ஆதரவு நிதி' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2.6 கோடிக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முதல் தவணையாக தலா ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.5,215 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் அறிவிப்பு
குறு, சிறு விவசாயிகளின் நலனுக்காக ‘பிரதமர் விவசாயி ஆதரவு நிதி' என்ற திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.75,000 கோடி ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள். நான்கு மாத கால இடைவெளியில் மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
பிப்ரவரி 24-ல் தொடக்கம்
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி நடந்த பிரம்மாண்ட விழாவில் விவசாயிகளுக் கான நிதியுதவி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது, நாடு முழுவதும் சுமார் 1.01 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் முதல் தவணையாக தலா ரூ.2,000 வீதம் ரூ.2,021 கோடி செலுத்தப்பட்டது.
அதேநாளில் சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி, விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தை தொடங்கிவைத்தார். முதல் நாளில் தமிழகத்தில் லட்சக் கணக்கான விவசாயிகள் இத்திட்டத்தில் பலன் அடைந் தனர்.
இதுவரை ரூ.5,215 கோடி
இந்நிலையில் பிரதமர் அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘பிரதமர் விவசாயி ஆத ரவு நிதி' திட்டம் அறி விக்கப்பட்ட 37 நாட்களில் 2.6 கோடிக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,215 கோடிக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. மிகவும் குறுகிய காலத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு இவ்வளவு பெரிய தொகை வழங்கப் பட்டிருப்பது இதுவே முதல்முறையாக இருக்கும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் முதலிடம்
கடந்த வாரம் மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘பிரதமர் விவசாயி ஆதரவு நிதி' திட்டத்தால் பலனடையும் மாநிலங்களில் உத்தரபிரதேசம், ஆந்திரா, குஜராத் ஆகியவை முன்னணியில் உள்ளன.
மார்ச் 7-ம் தேதி வரை உத்தர பிரதேசத்தில் 74.71 லட்சம் விவசாயிகளும் ஆந்திராவில் 32.15 லட்சம் விவசாயிகளும் முதல் தவணையாக தலா ரூ.2000 நிதியுதவியைப் பெற்றுள்ளனர்.
இதேபோல் குஜராத்தில் 25.58 லட்சம், மகாராஷ்டிராவில் 11.55 லட்சம், தெலங் கானாவில் 14.41 லட்சம், தமிழகத்தில் 14.01 லட்சம், ஹரியாணாவில் 8.34 லட்சம், அசாமில் 8.09 லட்சம், ஒடிசாவில் 8.07 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால் அடையாளம் காணும் பயனாளிகளுக்கு மத்திய அரசு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் உதவித் தொகையை செலுத்தி வருகிறது.
ஆதார் அவசியமில்லை
முதல் தவணை நிதியுதவிக்கு ஆதார் அவசியமில்லை என்று மத்திய அரசு அறிவித்தது. இதேபோல இரண்டாவது தவணை நிதியுதவி பெறுவதற்கும் ஆதார் அவசியமில்லை. இதர ஆவணங்களை அளித்து நிதியுதவி பெறலாம் என்று மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது. இரண்டாவது கட்ட தவணை நிதியுதவி ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மேற்குவங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் ஆட்சி நடத்தும் திரிணமூல் காங்கிரஸ் இத்திட்டத்தை புறக்கணித்திருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.