திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடி காணிக்கை செலுத்த அதிக நேரம் ஆவதை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால் தெரிவித்தார்.
மாதந்தோறும் நடைபெறும் ‘டயல் யுவர் இஓ’ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் தொலைபேசி மூலம் குறைகளையும், நிறைகளையும் தெரிவித்தனர். இதற்கு அதிகாரி எம்.ஜி. கோபால் பதிலளிக்கும்போது, ‘பக்தர்களின் நெரிசலை குறைக்க படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக, மூன்று வரிசை தரிசன முறை அமல் படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது ரூ. 300 சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுகளை, ஆன்லைன் மூலமாகவும், இ-தரிசன மையங்கள் மூலமாகவும் விநியோகம் செய்ய முன்வந்துள்ளோம். இதில் சில இடையூறுகள் உள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் அந்த இடையூறுகளை நீக்கி பக்தர்களுக்கு முழு சேவையை அளிப்போம். இதேபோன்று தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் இருந்து முடி காணிக்கை செலுத்துவதாக குறை கூறி உள்ளனர். அடுத்த கட்டமாக தலை முடி காணிக்கை செலுத்தும் முறையிலும் மாற்றம் கொண்டு வந்து, சீக்கிரமாக தலைமுடி காணிக்கை செலுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.