2ஜி வழக்கில் நவம்பர் 10-ம் தேதி முதல் இறுதி வாதம் தொடங்கும் என டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு டெல்லியில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 15 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 2ஜி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி: "இந்த வழக்கில் சாட்சியங்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்வது முடிந்துவிட்டது. எனவே, இறுதி வாதம் நவம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும்" என்றார்.
இருப்பினும், அமலாக்கப் பிரிவு துணை இயக்குநர் ராஜேஸ்வர் சிங் உள்ளிட்ட சிலரை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார். அமலாக்கப் பிரிவினர் நடத்திய விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதால், சில சாட்சியங்களிடம் மீண்டும் விசாரணை நடந்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தன் கிளை நிறுவனங்கள் வழியாக ரூ.200 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த பண பரிமாற்றம் சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வருவதால், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்தனர். இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.