குறைந்தபட்ச வருவாய் திட்டத்தின் கீழ் நாட்டில் ஏழ்மை நிலையில் இருக்கும் 20 சதவீதம் ஏழைக் குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக அளித்தார், இந்த அறிவிப்பை சாத்தியமில்லாத பம்மாத்து அறிவிப்பு என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி சாடியுள்ளார்.
வறுமையை ஒழிப்பதை எப்போதும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறதே தவிர இதுவரை ஒன்றும் செய்ததில்லை ஆகவே இத்தகைய வானளாவிய உத்தரவாதங்களை காங்கிரஸ் அறிவிக்க உரிமையற்றதாகிறது என்று அருண் ஜேட்லி சாடியுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த ரூ.72,000 அறிவிப்பை, “பம்மாத்து அறிவிப்பு” என்று சாடிய அருண் ஜேட்லி, “அவர்கள் விவசாயக் கடன் ரூ.72,000 கோடியைத் தள்ளுபடி செய்வதாக 2008-ல் அறிவித்தனர். ஆனால் ரூ.52,000 கோடிதான் தள்ளுபடி செய்தனர். கடைசியில் டெல்லி வர்த்தகர் ஒருவர் இதன் முக்கால்வாசிப் பயனை அடைந்ததாக இந்திய தலைமைத் தணிக்கையாளர் அறிக்கை தெரிவித்தது.
ராகுல் காந்தி அறிவித்ததை விட 1.5 மடங்கு அதிகமாக பிரதமர் மோடி அரசு ஏழைகளுக்கு சாதகம் செய்துள்ளது. நாங்கள் ஏற்கெனவே உர மானிய வகையில் ரூ.75,000 கோடி, ஆரோக்கியத்துக்காக ரூ.20,000 கோடி செலவிட்டுள்ளோம். இதில் 70-80% நடவடிக்கைகள் வங்கிகள் மூலம் நேரடியாகச் செய்யப்பட்டு வருகின்றன.
இதைத்தவிரவும் ரூ.1.8 லட்சம் கோடிக்கும் அதிகமாக இந்திய ஏழைமக்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கியுள்ளோம்.
காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு நேரடிப் பயன்கள் கிட்டும் ஆதார் திட்டத்தை எதிர்த்தது. நாடாளுமன்றத்தில் இவர்கள் எதிர்க்க அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆதாரை எதிர்த்தனர். இப்போது இவர்கள்தான் கூறுகிறார்கள் குறைந்த பட்ச ஏழைகள் வருவாய் திட்டத்தில் வங்கிகள் மூலம் பணம் அனுப்பப்படும் என்று.” இவ்வாறு சாடினார் அருண் ஜேட்லி.
இந்த திட்டம் தொடர்பாக ஏராளமான பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசித்து, கலந்தாய்வு செய்து அவர்களின் ஆலோசனைக்குப் பின் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5ஆண்டுகளாக மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள், அவர்களுக்கு நாங்கள் நீதி வழங்க விரும்புகிறோம் என்று ராகுல் காந்தி தன் அறிவிப்பின் போது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.