பாஜகவில் எம்.பி.யாக இருந்து கொண்டே, பாஜக அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து வந்த நடிகர் சத்ருஹன் சின்ஹாவுக்கு பாட்னாசாஹிப் தொகுதியில் இடம் அளிக்கப்படவில்லை.
அந்த தொகுதியில் சத்ருஹன் சின்ஹாவுக்கு பதிலாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.
பிஹாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலில் பிஹாரில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தலா 17 இடங்களிலும், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்த மூன்று கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில். பாஜக மாநிலத் தலைவர் பூபேந்திர யாதவ், ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் முன்னிலையில் பாஜக தங்கள் வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது.
பாட்னாசாஹிப் தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு போட்டியிட்டு வென்ற நடிகர் சத்ருஹன் சின்ஹாவுக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அந்த தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.
கடந்த 2016-ம் ஆண்டில் பணமதிப்பு நீக்கத்தை மோடி அரசு கொண்டுவந்தத்தில் இருந்து சத்ருஹன் சின்ஹா மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். சிலநேரங்களில் சார்ஜி என்ற பெயரில் மோடியை குறிப்பிட்டு, ட்விட்டரில் கண்டனத்தையும், விமர்சனங்களையும் தெரிவிப்பார்.
இதனால் பாஜகவில் எம்.பி. பதவி வகித்துக் கொண்டே, பாஜக அரசையும், பிரதமர் மோடி, உயர்மட்ட தலைவர்களை சத்ருஹன் சின்ஹா விமர்சித்து வந்தது கட்சியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் நடத்திய மகாகட்பந்தன் பேரணியில் சத்ருஹன் சின்ஹா பங்கேற்றது பாஜகவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இந்த முறை சத்ருஹன் சின்ஹா சீட் வழங்கப்படவில்லை.
லோக் ஜனதா தளம் கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் வழக்கமாக ஹிஜிபூர் தொகுதியில் போட்டியிடுவார். ஆனால், இந்த முறை அங்கு அவர் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக அவரின் இளைய சகோதரர் பசுபதி குமார் பலாஸ் போட்டியிடுகிறார். இவர் மாநில லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராகவும், மாநில அமைச்சராகவும் உள்ளார்.
மேலும், ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் ஜமு தொகுதியில் போட்டியிடுகிறார், பாஸ்வானின் மற்றொரு சகோதரர் ராம் சந்திர பாஸ்வான் சமஸ்திபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நவாடாதொகுதியில் போட்டியிட்டு கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை பெகுசாரி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். நவாடா தொகுதி ராம்விலாஸ் பாஸ்வான் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது
மேலும, ராதா மோகன் சிங் மோதிஹாரி தொகுதியில் இருந்தும், பாடலிபுத்ரா தொகுதியில் இருந்து ராம் கிர்பால் யாதவும், பக்ஸர் தொகுதியில் இருந்து அஸ்வானி சவுபேயும், அரா தொகுதியில் இருந்து ஆர்.கே. சிங்கும் போட்டியிடுகிறார்கள்.
பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் 17 பேரில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர் மட்டும் இடம் பெற்றுள்ளார். ஜக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் கிஷான்கஞ்ச் தொகுதியில் இருந்து மெகமூது அஷ்ரப் போட்டியிடுகிறார்.