விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது என்று பிரதமர் மோடி தேசத்துக்கு உரையாற்றிய விவரத்தை பிரதமர் அலுவலகம் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பிரதமர் மோடியின் உரை பற்றிய ஆடியோ, வீடியோ எப்படிக் கிடைத்தது என்பது பற்றி தூர்தர்ஷன், ஆல் இந்திய ரேடியோ அளித்த பதில்களை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.
இதற்காக நியமிக்கப்பட்ட தேர்தல் குழு இது தொடர்பாக இருமுறை சந்தித்து ஆலோசித்துள்ளது.
நாட்டுக்கு பிரதமர் உரையாற்றுவதை தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை என்று இந்தக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையம் கூறிய பிற விவரங்கள்:
முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான மொத்த வேட்பாளர்கள் 616, இதில் 493 ஆண் வேட்பாளர்கள், 45 பெண் வேட்பாளர்கள் அடங்குவர்.
கடந்த 4-5 வாரங்களில் ஒரு கோடிக்கும் மேலான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
cVIGIL மொபைல் ஆப் மூலமாக மொத்தம் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என்று 23,000 புகார்கள் வந்துள்ளன, இதில் 60% சரிபார்ப்பில் உண்மையானது என்று தெரியவந்துள்ளது, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொத்தம் 5.90 லட்சம் சி-விஜில் ஆப் டவுன்லோடுகள் நிகழ்ந்துள்ளது, மாற்றுத் திறனாளிகள் 13, 000 பேர் மற்றொரு தேர்தல் ஆணைய ஆப்பில் பதிவு செய்துள்ளனர்.
திமுக எம்.எல்.ஏ. மீது புகார்
பெண் ஆரத்தி எடுத்த போது பணம் கொடுத்ததாக திமுக மற்றும் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர், இதன் வீடியோ கிளிப்புகள் சமூக வலைத்தளத்தில் பரவியது என்று தேர்தல் குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் வாக்களிப்பின் போது கை விரலில் வைக்கும் மசியில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக பரப்பப்பட்ட செய்தி பொய் என்று தேர்தல் ஆணையம் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த ட்வீட்டும் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரில் அகற்றப்பட்டுள்ளதாக தேர்தல் குழு தெரிவித்துள்ளது.