இந்தியா

அபிநந்தனை வரவேற்பதை கவுரவமாகக் கருதுகிறேன்: பஞ்சாப் முதல்வர்

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய விமானப்படை விமானி இன்று மாலை நாடு திரும்பும் நிலையில் அவரை வாகா எல்லையில் வரவேற்கவிருப்பதைக் கவுரவமாகக் கருதுவதாக பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டுத் திரும்பியபோது, இந்தியாவின் மிக் ரக விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இதில் இந்திய விமானி அபிநந்தனை ராணுவம் கைது செய்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அபிநந்தனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசம் முழுவதும் ஒருமித்த குரல் ஒலித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான் , இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் அமைதி நடவடிக்கையின் காரணமாக விடுவிக்கப்படுவார் என்று நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) வாகா எல்லை வழியாக அபிநந்தன் தாயகம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்பிற்குரிய நரேந்திர மோடி. நான் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறேன். இப்போது அமிர்தசரஸில் இருக்கிறேன். பாகிஸ்தான் அரசு அபிநந்தனை விடுவிக்கவுள்ள செய்தியை அறிந்தேன். மகிழ்ச்சி. வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பும் அவரை நான் வரவேற்பதை கவுரவமாகக் கருதுகிறேன். அபிநந்தனும் அவரது தந்தையும் நான் பயின்ற தேசிய பாதுகாப்பு அகாடமியின் பழைய மாணவர்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. 1963 முதல் 1996 வரை அமரிந்தர் சிங் ராணுவத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT