இந்தியா

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் ரூ.225 கோடி சொத்துகள் முடக்கம்

பிடிஐ

உத்தரபிரதேச அரசின் பல்வேறு துறைகளில் செயலாளராக பணியாற்றியவர் நெட் ராம். உ.பி. முதல்வராக மாயாவதி இருந்தபோது 2002-03-ம் ஆண்டில் அவரது தனிச் செயலராக நெட் ராம் பணியாற்றினார்.

மாயாவதி ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரியாகவும் அவர் பணியாற்றியிருந்தார். 1979-ம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் கடந்த 12-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் லக்னோ நகரிலுள்ள இவரது பல்வேறு வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

அவரது நண்பர்களின் வீடு களிலும் சோதனை நடந்தது. அப்போது ரூ.1.64 கோடி ரொக்கம், ரூ.50 லட்சம் மதிப்புள்ள மான்ட்பிளாங்க் பேனாக்கள், 4 சொகுசு கார்கள், பினாமி பெயரில் வாங்கப்பட்ட ரூ.300 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வரி ஏய்ப்பு, பினாமி பெயரில் சொத்து போன்ற பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, நொய்டா, கொல்கத்தா நகரங்களில் இந்த சொத்துகள் வாங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இவரது ரூ.225 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முடக்கியுள்ளனர்.

அவரது 3 சொகுசு கார்களும் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான அறிவிப்பையும் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT