இந்தியா

பாக். பற்றி நினைப்பு- கொச்சிக்கு பதிலாக கராச்சி என்று கூறிய பிரதமர் மோடி: குழப்பத்தில் பாஜக தொண்டர்கள்

பிடிஐ

குஜராத்தின் ஜாம்நகரில் இன்று நடந்த  பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவின் கொச்சி நகரைக் குறிப்பிடுவதற்கு பதிலாக, பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரை மறந்தவாறு குறிப்பிட்டார்..

இதனால், பாஜக தொண்டர்கள் சில வினாடிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

குஜராத் மாநிலத்துக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு ஜாம்நகரில் குருகோவிந்த் மருத்துவமனையில் புதிய கட்டடிங்களை திறந்துவைத்து பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, அவர் பேசுகையில், " மத்திய அரசு கொண்டுவந்துள்ள மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம் ஜாம்நகரில் உள்ள மக்கள் நாட்டில் எந்த பகுதிக்கும் சென்று பயன்படுத்த முடியும்.

உதாரணமாக ஜாம்நகரைச் சேர்ந்த ஒருவர் போபால் செல்லும் போது திடீரென நோய் ஏற்பட்டால், உடல்நலக்குறைவு ஏற்பட்டால், மீண்டும் சிகிச்சைக்காக ஜாம்நகர் வரத் தேவையில்லை. ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை இருந்தால்,  நீங்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற முடியும். கொல்கத்தாவில் இருந்தாலும் சரி அல்லது கராச்சியில் இருந்தாலும் நீங்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற முடியும்" என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் எப்படி இந்தியாவின் சுகாதார அட்டை செல்லுபடியாகும் என்று பாஜக தொண்டர்களும், மக்களும் சில வினாடிகள் அதிர்ச்சி அடைந்து குழம்பினர்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி, " நான் கராச்சியைக் குறிப்பிடவில்லை, கேரள மாநிலத்தின் கொச்சி நகரைக் குறிப்பிட்டேன். சமீபகாலமாக என் சிந்தையில் அண்டை நாடு குறித்த விஷயங்கள்தான் அதிகமாக இருந்து வருகிறது. அதனால், கராச்சி என்று பேசிவிட்டேன். ஆனால், நாம் நடத்திய தாக்குதல் அங்கு அவசியமானது. அந்த தாக்குதல் நடத்தி இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா? " என்று மக்களிடம் கேட்டார். உடனடியாக, மக்களும், தொண்டர்களும் ஆம் எனக் கூறி கரகோஷம் எழுப்பினர்.

SCROLL FOR NEXT