உத்தர பிரதேசத்தில் ஒருகாலத்தில் அரசியல் எதிரியாக இருந்த முலாயம் சிங் யாதவுக்காக 24 ஆண்டுகளுக்கு பிறகு மாயாவதி ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 73 இடங்களில் வென்றது. வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும் எண்ணிய பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் பழைய பகையை மறைந்து இந்த தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன.
சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் எனவும். அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் மட்டும் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதாகவும் அக்கட்சிகள் அறிவித்தன. மாயாவதியும், அகிலேஷூம் இணைந்து பணியாற்றி வருகின்றனபோதிலும், இருக்கட்சிகளிடையே ஏற்கெனவே இருந்து வந்த எதிர்ப்பு உணர்வு முழுமையாக மறையவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி அமைக்க அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதற்கு காரணம், 24 ஆண்டுகளுக்கு முன்பு இருகட்சிகளிடையே நடந்த கசப்பான அனுபவமே காரணம். உ.பி.யில் 1995-ம் ஆண்டு இருகட்சிகள் கூட்டணி ஆட்சி நடந்து வந்ததது. முலாயம் சிங் முதல்வராக பதவி வகித்து வந்தார். பகுஜன் சமாஜ் கட்சி திடீரென முலாயம் சிங்குக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது.
அப்போது லக்னோவில் விடுதி ஒன்றில் மாயாவதி தங்கி இருந்தபோது, அந்த இடத்தை சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். தன் மீது சமாஜ்வாதி தொண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு முலாயம் சிங்கின் தூண்டுதலே காரணம் என மாயாவதி குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக பல இடங்களில் இருகட்சி தொண்டர்களும் மோதிக் கொண்டனர்.
இந்த கசப்பான சம்பவத்துக்கு பிறகு இருக்கட்சிகளும் ஒன்றையொன்று எதிர்த்தே போட்டியிட்டு வந்தன. 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பாஜகவுக்கு எதிராக இருகட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. மாயாவதியை பொறுத்தவரை அகிலேஷ் யாதவுடன் இணைந்து பணியாற்றுவதில் சிக்கல் இல்லை. எனினும் கடுமையாக விமர்சித்து வந்த முலாயம் சிங்குடன், இணைந்து பணியாற்ற மாயாவதிக்கு தயக்கம் இருந்தது.
இந்த தேர்தலில் முலாயம் சிங் யாதவ் மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஏப்ரல் 19-ம் தேதி அங்கு பிரச்சாரம் செய்ய மாயாவதி ஒப்புக் கொண்டுள்ளார். ஒரே மேடையில் முலாயம் சிங்குடன் சேர்ந்து மாயாவதி பிரச்சாரம் செய்யவுள்ளார்.
அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய லோக்தள தலைவர் அஜித்சிங் ஆகியோரும் பங்கேற்கின்றனர். 24 ஆண்டுகளுக்கு பிறகு மாயாவதி - முலாயம்சிங் சந்திப்பு எப்படி இருக்கும் என்ற ஆவல் உ.பி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.