இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் தனஞ்செய குமார் காலமானார்

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தனஞ்செய குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 68.

கர்நாடக மாநிலம், வேணூரை சேர்ந்தவர் தனஞ்செய குமார். பாஜகவில் 1983-ம் ஆண்டு இணைந்த தனஞ்செய்குமார், எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மங்களூர் தொகுதியில் 1989-ம் ஆண்டு போட்டியிட்ட அவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெனார்த்தன் பூஜாரியிடம் தோல்வியடைந்தார். எனினும் 1991-ம் ஆண்டு ஜெனார்த்தன் பூஜாரியை வீழ்த்தி அவர் எம்.பி ஆனார்.

1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தபோது, மத்திய அமைச்சராகவும் தனஞ்செய குமார் பதவி வகித்தார். பின்னர் அத்வானி உள்ளிட்டேரை விமர்சித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எடியூரப்பா, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கியபோது அக்கட்சியில் தனஞ்செய் குமார் இணைந்தார்.

எடியூரப்பா மீண்டும் பாஜகவில் இணைந்தபோது, தனஞ்செய குமார் பாஜகவில் இணைய அக்கட்சியில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியில் அவர் இணைந்தார். பின்னர் 2017-ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார்.

இதனிடையே சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர் இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.  அவரது இறுதிச்சடங்குகள் சொந்த ஊரான வேணூரில் நாளை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT