கடந்த மே மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் பதானில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். அந்த வழக்கில் பிரதமரின் உதவியை நாட அந்தச் சிறுமிகளின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு கீழமை நீதிமன்றம் ஒன்றினால் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. பாகுபாடு காட்டுவதாக அந்தச் சிறுமிகளின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இரண்டு சிறுமிகளின் தந்தையர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கங்கை ஆற்றின் நீர்மட்டம் குறைந்த பின்பும் அந்தச் சிறுமிகளின் சடலங்கள் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காகத் தோண்டி எடுக்கப்படவில்லை.
இரண்டாவது முறை பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் எப்படி சி.பி.ஐ.யால், அவர்கள் இருவரும் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்ற முடிவுக்கு வர முடிந்தது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், தங்கள் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறும், தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனில், சிறுமிகள் தொங்கிய அதே மரத்தில் தாங்களும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளப் போவ தாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.