இந்தியா பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜோதா விரைவு ரயிலின் 2 பெட்டிகளில், கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி குண்டு வெடித்ததில் 68 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள். இதுகுறித்து என்ஐஏ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
8 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரின் மகள் நேற்று புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “சம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பை நேரில் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள். ஆனால், அவர்களை சாட்சிகளாக அழைத்து விசாரிக்கவில்லை. அவர்கள் சாட்சி சொல்ல தயாராக உள்ளனர். ஆனால், விசா வழங்கப்படவில்லை. எனவே, அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்” என கூறியுள்ளார்.
இதைப் பரிசீலித்த நீதிமன்றம், இந்த மனு மீது வரும் 14-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று கூறியதுடன் தீர்ப்பையும் தள்ளி வைத்தது.