இந்தியா

தோல்விகளில் இருந்து மக்களை திசைதிருப்ப தேசப் பாதுகாப்பு எழுப்பப்படுகிறது : காங். செயற்குழு கூட்டத்தில் மோடிக்கு  கண்டனம்

பிடிஐ

தொடர்ந்து பேசிவரும் பொய்களையும், மாபெரும் தோல்விகளையும் மறைப்பதற்காகவும், திசைதிருப்பவும் மோடி, தேசப்பாதுகாப்பை தனக்கு ஏற்றார்போல் பயன்படுத்துகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட  செயற்குழுக் கூட்டம் குஜராத்தின் அகமதாபாத் நகரில் இன்று நடந்தது. கடந்த 58ஆண்டுகளுக்குப் பின் செயற்குழுக்கூட்டம் குஜராத்தில் நடக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அகமது படேல், குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோனி, புதிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சித்தராமையா, உம்மன் சாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா நிருபர்களிடம் சுருக்கமாக தெரிவித்தார். அவர் கூறுகையில், " தொடர்ந்து பேசி வரும் பொய்களையும், பொய்யான குற்றச்சாட்டுகளையும், ஒட்டுமொத்த நிர்வாக தோல்விகளையும் மறைக்கவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவும், தேசப்பாதுகாப்பை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். இதை காங்கிரஸ் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.

நமது எதிரிகளின் கொடிய எண்ணங்களையும், திட்டங்களையும், தேசத்தின் மக்கள் ஒற்றுமையுடன் இருந்து எதிர்ப்போம் தோற்கடிப்போம் என செயற்குழு தெளிவான, கடினமான செய்தியை தெரிவித்துள்ளது.

கடினமான சூழலில் இருந்து விரைவாக மீண்டெழும் ஜனநாயகத்தை இந்தியா பெற்றிருக்கிறது, எங்களின் துணிச்சல் மிகுந்த ராணுவ வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். இவர்களை எந்தஒரு தீவிரவாதமும், வன்முறையும் தோற்கடித்தது இல்லை என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

பெண்கள், மாணவர்கள், கல்விநிறுவனங்கள், எழுத்தாளர்கள், வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் ஒருவிதமான அச்சமான, பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அரசமைப்பு நிறுவனங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது, எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு பாதுகாப்பில்லை, மற்ற அரசு நிறுவனங்களும் தவறாக கையாளப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் தேசத்தின் மக்களிடமும், கூட்டணி கட்சிகளிடமும் பணிவுடன் ஆதரவு கோர காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.

சிறந்த நிர்வாகம், நம்பகத்தன்மை, மோடி அரசால் சேதப்படுத்தப்பட்ட ஜனநாயக அமைப்புகள், பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றை சீர்செய்தல், இந்திய பொருளாதாரத்தை மீண்டும் ஆரோக்கிய நிலைக்கு கொண்டுவருதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சமூக நீதி மற்றும் ஒற்றுமயை கொண்டுவருதல் போன்றவை கோரப்படும்.

 புல்வாமா தாக்குதல் காரணமாக இந்த செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தேசத்தை துண்டாட பிரதமர் மோடி முயல்கிறார். தேர்தல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகளின் தேசபக்தியையும், கடமையையும் பிரதமர் மோடி கேள்வி கேட்கிறார்.

ஆர்எஸ்எஸ், பாஜகவின் பாசிஸம், வெறுப்பு, கோபம், பிரித்தாளுதல் ஆகியவை தோற்கடிக்கப்படும். கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது " என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது

SCROLL FOR NEXT