காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வெகுவாக வடிந்து வருவதால் மீட்புப் பணியில் முன்னேற்றம் இருந்தாலும், 5 லட்சம் முதல் 6 லட்சம் வரையிலான மக்கள் உதவியை எதிர்நோக்கி தவித்து வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு வார காலம் பெய்த தொடர் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முப்படையினரின் உதவியோடு இதுவரை 82,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எனினும், இன்னும் 5 லட்சத்தில் இருந்து ஆறு லட்சம் மக்களுக்கு பாதுகாப்புப் படையினரின் உதவிகள் சென்றடையாத நிலை உள்ளது.
ஆங்காங்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட 807 டன் எடை மதிப்பில் நிவாரண பொருட்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் வீசப்பட்டு வருகின்றன.
ஸ்ரீநகரில் 4 லட்சம் பேர் தவிப்பு
மீட்புப் பணிகளில் துரிதமாக நடைபெற்று வரும் வேளையில், தலைநகர் ஸ்ரீநகரில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஜீலம் நதிக்கரையில் மட்டும் சுமார் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் வற்றாத நிலை உள்ளது. தற்போது ஸ்ரீநகரின் நிலைதான் மிகவும் மோசமானதாக தெரிகிறது. இங்கு மட்டும் சுமார் 4 லட்சம் மக்கள் சிக்கியுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகரின் தால் ஏரியில் தண்ணீர் அளவு அபாயகரமாக அதிகரித்து வருகிறது. ஜீலம் நதியிலிருந்து தால் ஏரிக்கு தண்ணீர் புகுந்தால், அந்தப் பகுதியில் ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தால், ஜீலம் நதியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாமல் இருந்தது. ஆனால், தற்போது ஜீலம் நதியில் தண்ணீர் வற்றாத நிலையில், அதன் வாயிலை திறந்துவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக ஜீலம் நதிகரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக நீக்க வேண்டியுள்ளது. அந்தப் பணிகளை மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள மக்கள் தங்களது உடமைகளை விட்டு வர மறுப்பதால், இதில் சிரமம் ஏற்பட்டுள்ளது" என்றார் அவர்.
நிவாரணப் பணிகள் தீவிரம்
ராணுவம் மற்றும் விமானப் படை சார்பில் 329 படைப்பிரிவுகள், 79 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் காஷ்மீரில் போர்க் கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. மீட்புப் பணியுடன் உணவு மற்றும் மருந்துப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
பாதிகப்பட்ட பகுதிகளில் ராணுவம் இதுவரை 8,200 போர்வைகள், 650 கூடாரங்கள், 1,50,000 லிட்டர் குடிநீர், 2.6 லட்சம் டன் பிஸ்கெட், 7 டன் குழந்தைகளுக்கான உணவு, 28 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளது. ஜம்மு பூஞ்ச் சாலை உள்பட சில சாலைகள் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன. மேலும் சில சாலைகளை போக்குவரத்துக்கு தயார்படுத்தும் பணி நடக்கிறது.