மகாராஷ்டிரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 61 வயதாகும் சிவசேனா கட்சியின் உள்ளூர் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவியான அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்ததை அடுத்து இந்த பலாத்கார சம்பவம் வெட்டவெளிச்சமானது.
கைது செய்யப்பட்டுள்ளவரின் பெயர் வாசுதேவ் நம்பூதிரி. அவர் சிவசேனா கட்சியின் மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். காசிமீரா நகரில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். தனது பள்ளியில் படித்து வந்த 9-ம் வகுப்பு மாணவியை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். கடந்த வாரம் மருத்துவமனையில் அச்சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் போலீஸுக்கு தகவல் தெரிவித்தது.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் வாசுதேவ் நம்பூதிரியை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின் போலீஸார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.