இந்தியா

ரபேல் விமானம் பயனுள்ளது என பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி ராணுவத்தில் அதை சேர்க்காமல் விட்டது ஏன்? - மாயாவதி கேள்வி

செய்திப்பிரிவு

ரபேல் விமானம் மிகவும் பயனுள்ளது என பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி தனது பதவிக்காலத்தில் அதனை ஏன் ராணுவத்தில் சேர்க்கவில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ரபேல் விமானங்கள் இருந்திருந்தால் இந்தியாவுக்கு இன்னும் கூடுதலான வெற்றி கிடைத்திருக்கும் என கூறியிருந்தார். இதுபற்றி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் ரபேல் விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில் ஒரு ரபேல் விமானம் கூட ராணுவத்தில் சேர்க்கப்படவில்லை.

ரபேல் விமானம் மிகவும் பயனுள்ளது என பாஜக நம்பினால் இதற்குள் அதனை நமது ராணுவத்தில் சேர்த்து இருக்க வேண்டும். அதை செய்யாதது ஏன். அது உண்மை என்றால் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கிடைத்த வாய்ப்பை பாஜக அரசு தவறவிட்டது ஏன்.

இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார். 

SCROLL FOR NEXT