விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி நேரலையில் அறிவித்ததைத் தொடர்ந்து ட்விட்டர் இந்தியாவில் #MissionShakti #PMModi #PMAdressToNation ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.
முன்னதாக, பிரதமர் மோடி தனது டவிட்டர் பக்கத்தில் "இன்று நண்பகல் 11.45 முதல் 12 மணிக்குள் முக்கியத் தகவலுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளேன். தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் பாருங்கள்" என்று தனது ட்விட்டரில் பதிவு செய்தார். இது நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து, பிரதமர் மோடி நேரலையில் பேசினார். அப்போது அவர், "விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.மிஷன் சக்தி என்று இந்த ஆப்ரேஷனுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
வெறும் 3 நிமிடங்களில் மிஷன் சக்தி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் செயற்கைக்கோள்களைக் காக்கும் முயற்சியே தவிர மற்ற நாடுகளுக்கு எதிரான தாக்குதல் இல்லை. மிஷன் சக்தி நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும்" எனப் பேசினார்.
அவரின் பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சூழலில் மிஷன் சக்தி தொடர்பான ஹேஷ்டேகுகள் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்துள்ளன.