இந்தியா

பிஜூ ஜனதா தளத்தில் இருந்து வெளியேறிய ஜெய் பாண்டா பாஜகவில் இணைந்தார்

செய்திப்பிரிவு

பிஜூ ஜனதா தளக் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அக்கட்சியில் இருந்து வெளியேறிய எம்.பி பைஜெயந்த் ஜெய் பாண்டா இன்று பாஜகவில் இணைந்தார்.

ஒடிசாவில் பிஜூ ஜனதாதள கட்சியை சேர்ந்த நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். அம்மாநிலத்தில் 2000-வது ஆண்டு முதல் 17 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் நவீன் பட்நாயக் மாநிலத்தில் நீண்ட காலம் முதல்வர் பதவி வகித்தவர்களில் ஒருவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

விரைவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறுகிறது. இதனால் ஒடிசா மாநிலத்தில் பாஜகவை வலிமைப்படுத்த நடவடிக்கை கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்த வருகிறது. பாஜக மூத்த தலைவரும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருமான தர்மேந்திர பிரதான் தலைமையில் அக்கட்சி கடந்த ஒராண்டாகவே, போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்களை தங்கள் பக்கம் இழுக்கவும் பாஜக காய் நகர்த்தி வருகிறது. ஆளும் பிஜூ ஜனதாதள கட்சியைச் சேர்ந்த பலர் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்து வந்தனர்.

இந்தநிலையில் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான பைஜெயந்த் ஜெய் பாண்டா அக்கட்சியில் இருந்து கடந்த ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்தநிலையில், இந்த நடவடிக்கையை நவீன் பட்நாயக் மேற்கொண்டார். இதையடுத்து அவர் பிஜூ ஜனதாதளத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அவர் விரைவில் பாஜகவில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகின. எனினும் அவர் பாஜக ஆதரவுடன், தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து வந்தார்.

 மிகச் சிறந்த பேச்சாளரான பாண்டா, தொழிலதிபராகவும் உள்ளார். மேலும் ஒரியா மொழி டிவி சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதனால், பாண்டாவை கட்சியில் சேர்த்தால் வலுசேர்க்கும் என பாஜக தலைவர்கள் திட்டமிட்டனர். இந்தநிலையில் பைஜெயந்த் ஜெய் பாண்டா இன்று பாஜகவில் இணைந்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் அவர் டெல்லியில் முறைப்படி பாஜவில் இணைந்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று செயலாற்ற உள்ளதாக கூறியுள்ளார்.  

SCROLL FOR NEXT