ஜம்மு காஷ்மீரில் கடந்த 60 மணிநேரமாக தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இதுவரை 2 சிஆர்பிஎப் வீரர்கள், 2 போலீஸார், ஒரு பொதுமக்கள் என 5 பேர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம், தீவிரவாதிகள் எத்தனை பேர் பலியாகியுள்ளனர் என்கிற விவரம் தெரியவில்லை என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பாபாகுண்ட் கிராமத்தில் தீவிரவாதிகள் பலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் அந்த கிராமப் பகுதியை பாதுகாப்புப் படையினர், காஷ்மீர் போலீஸார் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு வீடுகளில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், நேற்று நடந்த என்கவுன்ட்டரில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். ஆனால், தொடர்ந்து அந்த கிராமப்பகுதியில் உள்ள வீட்டிலிருந்து தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், எத்தனை தீவிரவாதிகள் அங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாமல் பாதுகாப்புப் படையினர் தேடும் பணியை விரைவுபடுத்தியுள்ளனர்.
இதற்கிடையே கடந்த 60 மணிநேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிஆர்பிஎப் வீரர்கள் 2 பேர், காஷ்மீர் போலீஸார் இருவர், பொதுமக்கள் ஒருவர் என மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட நிலையில், அவர்களையும், அவர்களின் உடைமைகளையும் சேர்த்து வீட்டோடு தீ வைத்து கொளுத்தப்பட்டு வருகின்றனர். இதனால், தீவிரவாதிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் நேர்ந்துள்ளது. யார் இவ்வாறு செய்கிறார்கள் எனத் தெரியாமல் பாதுகாப்புப் படையினர் வியந்துள்ளனர்.
கடந்த 3 நாட்களாக நடந்து வரும் தேடுதல் வேட்டையில் நடந்த துப்பாக்கிச் சண்டையால் பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளன என்று உள்ளூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், துப்பாக்கிச் சண்டைக்கு பயந்து உள்ளூர் மக்கள் வீட்டுக்குள் பதுங்கி இருக்கின்றனர்.