சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் தொடர்புடைய கொல்கத்தா போலீஸ் கமிஷனர் மின்னணு ஆதாரங்களை அழித்துவிட்டதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிடக்கோரியும் சிபிஐ தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
ரோஸ் சிட்பண்ட்ஸ், சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த மேற்குவங்க போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார், முறையாக விசாரிக்கவில்லை என வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன. விசாரணை ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தப் பலமுறை சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை. தற்போது கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனராக ராஜீவ் குமார் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு ராஜீவ் குமார் இல்லத்துக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால், வீட்டு வாயிலில் பாதுகாப்பில் இருந்த கொல்கத்தா போலீஸாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆவணங்கள் இல்லாமல் வந்திருப்பதாகக் கூறி சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தவிட்ட கொல்கத்தா போலீஸார், அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில், சிபிஐ தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீப் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா ஆஜராகி வாதிடுகையில், " பொன்ஸி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார், சிட்பண்ட் ஊழல் வழக்கில் உள்ள மின்னணு ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் " எனக் குற்றம்சாட்டினார்.
அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் " ஆதாரங்களை அழித்துவிட்டதற்கு எந்த விதமான சாட்சியும் இல்லையே. அவ்வாறு ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் தாக்கல் செய்யுங்கள், கடும் நடவடிக்கை எடுக்கிறோம். உங்கள் மனு நாளை விசாரணைக்கு எடுக்கிறோம் " எனத் தெரிவித்தார்.