இந்தியா

இழப்பீடு அளிப்பதில் வித்தியாசம் காட்டும் மாநில அரசுகள்: 44 வீரர்களுக்கும் ரூ.5 லட்சம் அறிவித்து பாராட்டு பெறும் நாயுடு

ஆர்.ஷபிமுன்னா

புல்வானாவில் நிகழ்ந்த தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் ஒரே மாதிரியாக பலியானார்கள். ஆனால், அவர்களுக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு தொகைகளில் மாநிலவாரியாக அதன் அரசுகள் வித்தியாசம் காட்டியுள்ளன.

தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு மத்திய அரசு சார்பில் தனியாக என இழப்பீடு அளிக்கப்படுவதில்லை. தம் பணியின் போது அந்தவீரர்கள் செலுத்திய ‘குரூப் இன்ஷுரன்ஸ்’ தொகையில் இருந்து இழப்பீடு கிடைக்கிறது.

இத்துடன், அந்த வீரர்களின் சொந்த மாநிலங்களை சேர்ந்த அரசுகள் இந்த தியாகிகளுக்கு இழப்பீடு அளிப்பது வழக்கமாக உள்ளது. இவர்கள் செய்த வீரத்தியாகங்களில் எந்த வித்தியாசமும் இல்லை.

என்றாலும், இந்தமுறை ஒரே வகையில் பலியான 44 வீரர்களுக்கு இழப்பீடு அளிப்பதில் மாநிலவாரியாக அதன் அரசுகள் வித்தியாசப்படுத்தி உள்ளனர். இந்தசெயல், ராணுவ வீரர்கள் இடையே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதன் பின்னணியில் அம்மாநில அரசியலும், வரவிருக்கும் மக்களவை தேர்தலும் காரணமாகி விட்டது. இதனால், ஒவ்வொரு மாநிலங்களும் ஒரு தொகையையும், சலூகைகளையும் அறிவித்துள்ளன.

தமிழகத்தின் இரண்டு வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் அளித்தது, முதல் அமைச்சர் கே.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு. பிஜு ஜனதா தளம் ஆளும் முதல்வர் நவீன் பட்நாயக் தம் மாநிலத்தில் பலியான இரண்டு வீரர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் அறிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் பலியான ஒருவருக்கு முதல்வர் டி.குமாரசாமி ரூ.2 லட்சமும், வீரரின் மனைவிக்கு அரசு பணியும் அளிப்பதாக அறிவித்துள்ளார். இதையே ரூ.25 லட்சமாக பாஜக ஆளும் உபி அரசின் முதல்வர் யோகி ஆதித்யநாத், அதிக எண்ணிக்கையில் உயிர்நீத்த தம் மாநிலத்தின் 12 வீரர்களுக்கு அறிவித்துள்ளார்.

இக்கட்சி ஆளும் அருகிலுள்ள உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திரா சிங் ராவத்தும் ரூ25 லட்சம் அறிவித்துள்ளார். இங்கு பலியான இரண்டு விரர்கள் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு பணியும் அளிக்கப்பட உள்ளது.

பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ஜார்கண்டில் ஒரு வீரர் பலியாகி உள்ளார். இவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்சமும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிஹாரில் பாஜக ஆதரவுடன் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் முதல்வர் நிதிஷ்குமார் ரூ.11 லட்சம் இழப்பீடாக அறிவித்துள்ளார். பிஹாரில் இரண்டு வீரர்கள் பலியாகி உள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் பலியான ஒருவருக்கு அங்கு அரசு இல்லாததால் நிவாரணத்தொகை எதுவும் அளிக்கப்படவில்லை.

இந்த அனைத்து மாநிலங்களையும் மிஞ்சும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்த காங்கிரஸ் அரசுகள் அறிவிப்பளித்துள்ளன.

இவர்களில், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தம் மாநிலத்தை சேர்ந்த ஒரு வீரருக்கு ரூபாய் ஒரு கோடி, அவரது குடும்பத்திற்கு அரசு பணியும் அறிவித்துள்ளார்.

மற்றொரு மாநிலமான ராஜஸ்தானின் முதல் அமைச்சர் அசோக் கெல்லோட் தொகையை அதிகரித்து அறிவித்துள்ளார். இதில் தன் மாநில ஐந்து வீரர் குடும்பத்தினருக்கு அவர், ரூ.50 லட்சம் அல்லது ரூ.25 லட்சத்துடன் 25 பிகா நிலமும் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான பஞ்சாபில் நான்கு வீரர்கள் பலியாகி உள்ளனர். இதன் முதல்வரான கேப்டன்.அம்ரீந்தர்சிங் அவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணியும் தலா ரூ12 லட்சமும் அளிக்க உள்ளார்.

இந்த தாக்குதலில் வேறுசில மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் நல்லவேளையாக பலியாகவில்லை. இதனால் அவர்கள் பலியான சிஆர்பிஎப் வீரர்கள் குடும்பத்தினருக்கு எதுவும் தரவேண்டிய அவசியப்படவில்லை.

அனைவருக்கும் ரூ5 லட்சம் அளித்த நாயுடு

எனினும், இந்த விஷயத்தில் ஆந்திரா முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு செய்த அறிவிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. புல்வானா தாக்குதலில் பலியான அனைத்து வீரர்களுக்கும் தம் அரசு சார்பில் தலா ரூ.5 அளிப்பதாக ஆந்திர முதல்வர் நாயுடு அறிவித்துள்ளார்.

சிக்கிம்

சிக்கிம் மாநிலத்தை ஆளும் முதல்வர் பவன்குமார், நாயுடுவை போலவே தாக்குதலில் பலியான அனைத்து வீரர்களுக்கும் ரூபாய் 3 லட்சம் அறிவித்துள்ளார். இவரது கட்சியான  சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு பாஜக,  மாநிலத்தில் எதிர்க்கட்சியாகவும் மத்தியில் கூட்டணியாகவும் உள்ளது.

தாமதிக்கும் சில மாநிலங்கள்

இன்னும் வேறுசில அரசுகள் தம் மாநிலத்தை சேர்ந்த வீரர்களுக்கும் இன்னும் இழப்பீடு தொகை அறிவிப்பதில் தாமதித்து வருகின்றன. அதேசமயம் பாலிவுட் நடிகர்கள், தனியார் அமைப்புகள் என பல தரப்பினரும் உயிரிழந்த வீரர்களுக்கு உதவித் தொகையை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT