பெங்களூருவில் நடைபெற்று வரும் ‘ஏரோ இந்தியா 2019’ சர்வதேச விமானக் கண்காட்சியின் வாகன நிறுத்தம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 300-க் கும் மேற்பட்ட கார்களும் 100-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த மத்திய பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘ஏரோ இந்தியா’ சர்வதேச விமானக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில், 12-வது ஏரோ இந்தியா விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 20-ம் தேதி பெங் களூருவில் உள்ள எலஹங்கா விமானப் படை தளத்தில் தொடங்கி வைத்தார்.
இதில் 22 நாடுகளின் 61 போர் விமானங் கள் பங்கேற்றுள்ளன. அவற்றின் சாகசங் கள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர விமான தொழில்நுட்பம் தொடர்பான 365 நிறுவனங்களின் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கண்காட்சியின் 4-ம் நாளான நேற்று விடுமுறை நாள் என்ப தால் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வை யாளர்கள் குவிந்தனர். இதனால் பொது மக்கள், முக்கிய பிரமுகர்கள், விமான நிலைய ஊழியர்களின் ஏராளமான வாக னங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
நேற்று பகல் 12.15 மணியளவில் பொது மக்களுக்கான வாகன நிறுத்தம் பகுதியில் (கேட் எண்- 5) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கார்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்ததால் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் பொது மக்களும் காரின் டயரில் இருந்த காற்றை பிடுங்கி விட்டனர்.
எனினும், வெயில் நேரம் என்பதால் தீ மிக வேகமாக பரவியது. இதனால் டயர்களும் வாகனங்களின் பாகங்களும் பெரும் சத்தத்துடன் வெடித்தன. இதைக் கண்டு அச்சமடைந்த மக்கள் அங்கும் இங்கும் பதறியடித்து ஓடியதால், அப்பகு தியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட கார்களும் இரு சக்கர வாக னங்களும் எரிந்து நாசமாகின. 5 தீயணைப்பு பொறியாளர்கள் தலைமையிலான 10 குழுக்களைச் சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் 2 மணி நேரம் தீவிரமாக போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். அதேநேரம் இந்த விபத்தில் எவ்வித உயிர் பலியும் ஏற்படவில்லை. 2 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
இழப்பீடு கிடைக்குமா?
இதுகுறித்து கர்நாடக தீயணைப்பு படை டிஜி எம்.என்.ரெட்டி கூறும்போது, “இந்த தீ விபத்தில் 300-க்கும் மேற்பட்ட கார்களும் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் எரிந்து நாசமாகி யுள்ளன. தீ விபத்துக்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. தரையில் இருக் கும் காய்ந்த புற்களில் ஏற்பட்ட தீ கார ணமா, யாரேனும் சிகரெட் புகைத்துவிட்டு கீழே போட்ட சிறு துண்டு நெருப்பினால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் சதி வேலை காரணமா என விசாரிக்க வேண்டும்” என்றார்.
இதனிடையே மத்திய பாதுகாப்புத் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “இந்த தீ விபத்து குறித்து நீதி விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் சேதமடைந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு வழங்க உதவுமாறு மத்திய நிதி மற்றும் சேவை துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது” என தெரிவிக் கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் கார் மற்றும் உடைமை களை இழந்த பொதுமக்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு கர்நாடக உள் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆறுதல் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். விபத்து காரணமாக விமானக் கண்காட்சி 4 மணி நேரத்துக்கு நிறுத்தப்பட்டு, பின்னர் வழக்கம்போல சாகசங்கள் அரங்கேறின.
கண்காட்சி தொடங்குவதற்கு முந் தைய நாள் ஒத்திகையில் ஈடுபட்ட விமானி, இரு விமானங்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தார். நேற்று 300-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சாம்பலான நிலையில், விமான கண்காட்சிக்கான ஏற்பாடுகள் சீராக செய்யப்படவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது.