காஷ்மீரில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 45 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த அவர்களின் குடும்பங்கள் தீராத சோகத்துக்கு ஆளாகியுள்ளன.
ஜம்முவில் இருந்து சிறீநகர் நகர் நோக்கி நேற்று 2500க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, புல்வாமா மாவட்டம், அவந்திபோரா நெடுஞ்சாலையில் சென்றபோது, 350 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை சிஆர்பிஎப் வீரர்கள் பயணம் செய்த பேருந்து மீது மோதச் செய்து தீவிரவாதி ஒருவர் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.
இதில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர், 38-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்திய தீவிரவாதி, ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்பது தெரியவந்தது.
தாக்குதலில் உயிரிழந்த 45 வீரர்களும் நாட்டின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பஞ்சாப், காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அவர்கள் உயிரிழந்துள்ளதால் அவர்களது குடும்பத்தினர் பெரும் சோகத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த வீரர் நஸிர் அகமதுவும் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் மொகாவைச் சேர்ந்த ஜெய்மல் சிங் உயிரிழந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த வீரர் பங்கஜ் திரிபாதி கொல்லப்பட்டுள்ளார். அவரது வீட்டின் முன்பு உறவினர்கள் கூடியுள்ளனர். அவரது இளம் மனைவியும், குழந்தையும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த மணிந்தர் சிங் உயிரிழந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவரது இழப்பால் பெற்றோர்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் வாராணியைச் சேர்ந்த ரமேஷ் யாதவும் உயிரிழந்துள்ளால் அவரது உறவினர்களும் தீராத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.