சீனா, இந்தியா இடையேயான எல்லைப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் என்று கூறியிருக்கிறார் திபெத் மதத் தலைவர் தலாய் லாமா.
சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை அவர் திபெத் பிரச்சினையுடன் இணைத்து பேசி இருக்கிறார்.
லே பகுதியிலிருந்து 300 கிமீ தொலைவில் உள்ள சுமர் கிராமத்தில் சீன மற்றும் இந்திய படைகளுக்கு இடையே சில தினங்களுக்கு முன் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு பதற்றம் உருவானது.
இத்தகைய நிலையில் இந்தியாவில் பயணம் மேற் கொண்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் எல்லை பிரச்சினை, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பு நடந்த நிலையில் நிருபர்களிடம் தலாய் லாமா கூறியதாவது:
திபெத் பிரச்சினையும் இந்தியா வின் பிரச்சினைதான். சீன அதிபர் உண்மை நிலைமையை புரிந்துகொள்பவர், திறந்த மனம் படைத்தவர். இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள மக்களுக்கு இடையே நல்லிணக்கம் நிலவுவதை புரிந்து கொண்டு சீனா அதிலிருந்து பாடம் கற்கவேண்டும்.
1950க்கு முன் வடக்கு எல்லை பகுதியில் அமைதி தழுவியது. ஒரு படை வீரர் கூட அங்கு இல்லை. எனவே திபெத் பிரச்சினையும் இந்தியாவின் பிரச்சினைதான். இன்றைக்கு இல்லாவிட்டாலும் வரும் காலத்தில் இந்த பிரச்சினை களுக்கு தீர்வு கண்டாக வேண்டியது கட்டாயம். இதற்கு படைபலம் தேவையில்லை.பேச்சுவார்த்தை போதும். பேச்சுவார்த்தை நடந்தால் புரிந் துணர்வு ஏற்படும்.
இந்தியாவும் சீனாவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாகும். ஆனால் இந்தியா அதிக மக்களை கொண்ட ஜனநாயக நாடு. ஸ்திரத்தன்மை யுடன் நாடு செல்கிறது.
கிழக்கு இந்தியா, தென் இந்தியா, மேற்கு இந்தியா, வட இந்தியா என பல பிராந்தி யங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு எழுத்து வடிவங்கள் உள்ளன. ஆனால் நல்லிணக்கம் நிலவுகிறது. பரஸ்பர நம்பிக் கையை அடிப்படையாகக் கொண்டு சீன- இந்திய உறவு இருக்கவேண்டும். இந்த நல்லுறவு ஆசியாவுக்கும் உல கம் முழுமைக்கும் பலன் தரும்.
நம்பிக்கை ஏற்படுத்தினால் நல்லிணக்கம் அமையும், மிரட்டலால் வராது. சீனாவின் புதிய தலைமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு தலாய் லாமா கூறினார். முன்னதாக, இந்திய வணிகர்கள் பேரவையின் 108-வது நிறுவன தினத்தில் பங்கேற்றார் தலாய் லாமா.