இந்தியா

மக்களவைத் தேர்தல்; பெங்களூருவில் போட்டியிடும் பிரகாஷ் ராஜ்: ஆதரவு அளிக்க காங்கிரஸ் திடீர் நிபந்தனை

செய்திப்பிரிவு

பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் பிரகாஷ் ராஜூக்கு ஆதரவளிக்க கட்சியில் சேர வேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.  

கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், அண்மைக்காலமாக மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவின் நடவடிக்கைகளை சாடி வருவதால் கர்நாடகாவில் பாஜகவினர் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில்  பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். பெங்களூரு மத்திய தொகுதியில் தன்னை பொது வேட்பாளராக அறிவித்து மதச்சார்பற்ற கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும் ஆம் ஆத்மி கட்சி மட்டுமே அவருக்கு ஆதரவு அளித்துள்ளது. பெங்களூருவில் ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு  இல்லாத நிலையில் காங்கிரஸ் ஆதரவு பிரகாஷ் ராஜூக்கு மிக முக்கியம். ஆனால் அவரை ஆதரிக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது.

இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘பிரகாஷ் ராஜ் வைத்துள்ள கோரிக்கை குறித்து எங்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். கட்சித்தலைமையுடனும் விவாதித்தோம். எங்களை பொறுத்தவரை அவர் காங்கிரஸில் இணைந்தால் அவருக்கு பெங்களூரு தொகுதியை வழங்குவது குறித்து பரிசீலிப்போம்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT