இந்தியா

சதாசிவத்தை ஆளுநராக நியமிப்பது ஏன்?: காங்கிரஸ் கேள்வி

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவத்தை கேரள ஆளுநராக நியமிப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரள ஆளுநராகப் பணியாற்றிய ஷீலா தீட்சித் அண்மையில் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து அந்த மாநில புதிய ஆளுநராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம் நியமிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பலர் உள்ளனர்.

ஆனால் அவர்களில் பி. சதா சிவத்தை ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவரது ஏதோ ஒரு நடவடிக்கை பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக தலைவர் அமித் ஷாவையும் திருப்திபடுத்தியுள்ளது.

அதன்காரணமாகவே அவர் ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.

நீதிபதிகள் யாரும் இதுவரை ஆளுநர்களாக நியமிக்கப்படவில்லை. அந்த மரபு மீறப்பட்டுள்ளது. அது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT